அவசரநிலை- Emergency 1975 (3)
அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வழக்கில், இந்திராகாந்தி வெற்றிபெற்றது செல்லாது என அவருக்கு எதிராக நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்பு வழங்கினார்.
அரசு அதிகாரியான யஷ்பால் கபூர், உத்திரபிரதேச அரசு இயந்திரம் இந்திராவுக்காக தேர்தல் பணியாற்றியதால் அவருடைய வெற்றி சட்டப்பூர்வமாக செல்லாது என்று ஷோசியலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜநாராயணன் தொடுத்த வழக்கிற்கு 1975 ஜுன் 12 ம் நாள் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பின் காரணமாக ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், கிருபளானி, விஜய ராஜ சிந்தியா, சரண்சிங், எல்.கே அத்வானி, சத்யேந்திர நாராயண சின்ஹா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நானாஜி தேஷ்முக், வழக்கறிஞர் சாந்தி பூஷண், போன்றோர் இந்திராகாந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக கோரிக்கை வைத்தனர். அரசியல் கட்சிகளான தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி, பாரதிய லோக் தளம், அகாலிதளம் ஆகியவை அவசர நிலையை கடுமையாக எதிர்த்தது. ஆனால் பூவேஸ் குப்தா தலைமையிலான இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சி அவசரநிலையை ஆதரித்தது.
ஆளும் காங்கிரசின் இளந்துருக்கியராகக் கருதப்பட்ட, இந்திராகாந்தியின் ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த மேனாள் பிரதமர் சந்திரசேகர், மற்றும் கிருஷ்ணகாந்த், மோகன் தாரியா, ராம்தான் மட்டுமில்லாமல் ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி லட்சுமி காந்தம்மா ஆகியோர் இந்திராகாந்தி பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென்று அறிக்கையை வெளியிட்டனர்.
அப்போது தஞ்சைமாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், இந்திராகாந்தி ராஜினாமா செய்யவேண்டுமென்று பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை வைத்தார்.
வழக்கறிஞர் சித்தார்த்த சங்கர் ‘ரே’-யுடன் நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்வதில்லை என முடிவெடுத்த இந்திராகாந்தி குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவிடம் அவசரநிலை பிரகடனத்தைப் பரிந்துரைக்க அவரும் எதையும் ஆலோசனை செய்யாமல் ஒப்புதல் அளித்தார். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசரநிலை பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தது குறித்து தனியாகவே ஒரு பதிவு செய்யவேண்டும். 1975 ஜூன் 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) “நெருக்கடி நிலை” பிரகடனம் செய்யப்பட்டது.
அவசரநிலை அறிவித்தவுடன் அதனை, வினோபா ஆதரித்தார். உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளின் பணிமூப்புப் பட்டியலை மீறி ‘ஏ.என்.ரே’ 14வது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சஞ்சய் காந்தி, சித்தார்த் சங்கர் ரே, வி.சி.சுக்லா, திரேந்திர பிரம்மச்சாரி, பிற்காலத்தில் தேர்தல் ஆணையாளராக பதவியேற்ற நவீன் சாவ்லா, ஒரிசா முதல்வராக இருந்த நந்தினி சப்பதி, யஷ்பால் கபூர், ஓம் மேத்தா, பன்சி லால் , பஜன் லால், ஆர்.கே தவான், ஜக்மோகன், கிஸான் சந்த், ரக்ஷினா சுல்தானா, அம்பிகா சோனி போன்றோர் அவசர நிலை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து நடந்த அத்துமீறல்களுக்கெல்லாம் துணைபோனார்கள்.
தமிழகத்தில் நெருக்கடி நிலையை பெருந்தலைவர் காமராஜர் எதிர்த்தார்.
திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து பகிரங்கமாக தன் எதிர்ப்பை வெளியிட்டார். நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அவருடைய வெற்றிக்குப் பின் இச்சமயத்தில் தான் அதிகமான முறை அவரைச் சந்திக்க அடியேனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதே ஆண்டு ஜூன் 27ம் தேதி தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த செயற்குழுவில், எமெர்ஜென்சிக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 6ம் தேதி சென்னை கடற்கரையில், தலைவர் கலைஞர் தலைமையில் மாபெரும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.
தலைவர் கலைஞரும், பெருந்தலைவர் காமராஜரும், பூந்தமல்லி சாலையில் உள்ள டாக்டர் அண்ணாமலை அவர்கள் இல்லத்தில் தனியாகச் சந்தித்து இதுகுறித்து நீண்ட் ஆலோசனையும் நடத்தினர். அப்போது கலிவரதன் உடன் இருந்தார். பெருந்தலைவர் காமராஜர், “தேசம் போச்சு தேசம் போச்சு” என்று வேதனையோடு கூறியதை அனைவரும் அறிவார்கள்.
ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் துவங்கியதும் தி.மு.க உறுப்பினர்களாக இருந்த இரா. செழியன் மக்களவையிலும், மாரிச்சாமி மாநிலங்களவையிலும் அவசரநிலையினை எதிர்த்து கடுமையான கண்டனக் குரலை எழுப்பினர்.
இந்திராகாந்தி அந்த சமயத்தில், இந்தியாவில் இரண்டு தீவுகள் உள்ளன.
ஒன்று தி.மு.க தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, மற்றொன்று ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் நடக்கும் குஜராத் மாநிலம் என்று கூறி இந்த இரண்டு மாநில ஆட்சிகளையும் குறிவைத்து கடுமையாக எச்சரிப்பதுபோல பேசினார்.
அவசரநிலை காலத்தில் 20அம்ச திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டது.
சஞ்சய் காந்தி போன்றோர்களால் 32 லட்சம் பேருக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டது. அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட விதவைகள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினார்கள். இஸ்லாமியர்கள் வசிக்கும் துர்க்மான் கேட்- பகுதியிலிருந்து கட்டாயப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தியது. சிறைக் கொட்டடியில் நடந்த கொடுமைகள் என பல அத்துமீறல்கள் என நாட்டு மக்களை பல அவதிகளுக்குள்ளாக்கியது எமெர்ஜென்ஸி.
பெங்களூரில் சிறையிலடைக்கப்பட்ட அடல்பிகாரி வாஜ்பாயும், எல்.கே.அத்வானியும் அங்கே சிறையிலிருந்த திரைப்பட நடிகை சினேகலதா ரெட்டி காவல்த்துறையின் அத்துமீறல்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கதறி அழுத அழுகையை கேட்டதாக பின்புகூறினார்கள். பரோலில் அனுப்பப் பட்டவுடன் திரையுலகைச் சார்ந்த சினேகலதா ரெட்டி உயிரிழந்தார். நாடாளுமன்ர உறுப்பினர்களாக இருந்த தாரகேஸ்வரி சின்ஹா, ஜெய்ப்பூர் மகாராணியான காயத்ரிதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் கைது செய்யப்பட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் அவரை கைது செய்தது செல்லாது என்று விடுதலை செய்தது. அவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகளும் பழிவாங்கப்பட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 1975 ஆகஸ்ட்9,10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நெல்லை மாநாட்டிலும், அதே ஆண்டு கோவையில் டிசம்பர் 28ல் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் அவசரநிலை குறித்து தி.மு.கவின் கண்டன தீர்மானமும், தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சும் அமைந்தது.
இம்மாநாடுகளுக்குப் பிறகு, பம்பாயில் சிவாஜி பார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும் போது, ஆர்.எஸ்.எஸ், ஆனந்தமார்க் , நக்சலைட் இயக்கங்கள் போன்று தி.மு.கவும் தடைசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே 26 இயக்கங்கள் அவசர நிலைகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் முரசொலி, தினமணி, இந்தியன் எக்ஸ்ப்ரஸ், துக்ளக் பத்திரிகைகள் மீது கடுமையான தணிக்கை இருந்தது.
முரசொலியில் தலைவர் கலைஞர் ஊகமாகவும் பூடகமாகவும் எழுதிய செய்திகள் மூலம் மக்கள் அவசரநிலைபற்றி புரிந்துகொண்டனர்.
எம்.ஜி.ஆர் எமெர்ஜென்ஸிக்கு அஞ்சி தன் கட்சிக்கு “அகில இந்திய” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சேர்த்துக்கொண்டார். அவசரநிலையை ஆதரிக்கவும் செய்தார்.
சஞ்சீவ ரெட்டியும் அடிக்கடி வந்து தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திப்பது உண்டு. ஜார்ஜ் பெர்னாட்டஸும் தலைவர் கலைஞர் அவர்கள் உதவியால் சென்னையில் வந்து தங்கியிருந்ததால் மத்திய அரசால் அவரைக் கைது செய்யமுடியவில்லை. அவர் கல்கத்தாவிற்கு ரயிலில் சென்ற போதுதான் எம்.கே.நாராயணன் மூலமாக உளவறியப்பட்டு தமிழக எல்லைக்கு வெளியே கைது செய்யப்பட்டார்.
அவசரநிலைகாலத்தில் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை,”என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் அவசரநிலையை எதிர்த்து கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்தமுடிந்தது. அதற்கு காரணம் இங்குள்ள முதல் அமைச்சர் தான்” என்று பாராட்டிச் சொன்னார். அப்போதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் நிர்மாணித்த, வள்ளுவர் கோட்டம் அமையும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் மீது வன்மம் கொண்டு இந்திராகாந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31-நாளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழகச் சட்டமன்றத்தில் மொத்தம் 234 இடங்களில் அப்போது திமு கழகம் 167 இடங்களும் அதிமுக17, ஸ்தாபன காங்கிரஸ் 13, இந்திரா காங்கிரஸ் 7, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி 2, முஸ்லீம் லீக் 6, பார்வேர்ட் ப்ளாக் கட்சி 7, சுதந்திரா கட்சி 4, தமிழரசுக் கழகம் 1, சுயேச்சை 1, அவைத்தலைவர் 1, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் 2, காலியான இடம் 1 என திமுகவிற்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் கழக ஆட்சி கலைக்கப்பட்டது.
ஆட்சி கலைக்கப்பட்டதும் தி.மு.கவின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முரசொலிமாறன், தளபதி மு.க.ஸ்டாலின், அன்றைக்கு தி.மு.கவிலிருந்த வை.கோ அவர்கள், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மிசா சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டனர்.
சென்னை மத்தியச் சிறையில் அன்றைக்கு சிறைக்காவல் அதிகாரியாக இருந்த வித்யாசாகர் முரசொலி மாறனையும், தளபதி ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்றோர்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதும், அதன் விளைவாக சிட்டிபாபு உயிரிழந்ததெல்லாம் வேதனையான செய்திகள். இவற்றை முழுமையாக சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரிக்குறிப்பில் எழுதியுள்ளார். மதுரை சிறை அதிகாரிகளின் அத்துமீறல்களால் சாத்தூர் பாலகிருஷ்ணன் கொல்லப்பட்டார்.
எமெர்ஜென்சியை ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளும் கேரள அரசுக்கு ஓராண்டுகாலம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கழக அரசு திட்டமிட்டு கலைக்கப்பட்டது. தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதும் அறிக்கைகளும், கடிதங்களும் கடுமையாக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. தலைவர் கலைஞர் அவர்களின் இல்லம், முரசொலி அலுவலகம், வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரால் சோதனையிடப்பட்டு இன்னல்களுக்கு ஆளாக்கபட்டார்.
இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தலைவர் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்களைச் சந்தித்தார். மிசா கொடுமைகளுக்கு ஆளான குடும்பங்களுக்குத் தன் ஆறுதலையும் தெரிவித்தார். இந்த கடுமையான சூழ்நிலை ஜனவரி 1977வரை நீடித்தது.
இதற்கிடையில் டெல்லி சென்று தலைவர் கலைஞர் அவர்கள்,
இரா.செழியன் வீட்டில் டிசம்பர் 15 1976 அன்று மிசா கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார்.
அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக் மேத்தா, அக்கட்சியின் செயலாளர் திருமதி மொகிந்தர் கவுர், திக்விஜய் நாராயணசிங், பிலுமோடி, எச்.எம்.படேல், பிஜு பட்நாயக், சமர்குகா, சுரேந்திர மோகன், வாஜ்பாய், கிருஷ்ண காந்த், பேராசிரியர் ஷெர்சிங், க.ராஜாராம் (திமுக), ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் , தலைமையேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் நெருக்கடிநிலைகளைத் திரும்பப் பெற்று, சுதந்திரக் காற்று திரும்பவும் நாட்டில் வீச வேண்டுமென்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவு பெற்றது. மறுநாள் எச்.எம்.படேல் அவர்களின் இல்லத்தில் அந்தத் தீர்மானத்தின் இறுதி படிவம் வெளியிடப்பட்டது.
இதனையறிந்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து சற்று இறங்குவதைப் போல அவருடைய பேச்சுகள் அமையத் தொடங்கியது.
1977 ஜனவரி 18ம் நாள் அவசரநிலை திரும்பப் பெற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமென்றும் , கைதுசெய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் வானொலியில் அறிவித்தார். 1977 ஜனவரி 23ம் நாளிலிருந்து பிப்பிரவரி 2ம் நாள் வரை ஒவ்வொரு தலைவராக சிறையிலிருந்து மீண்டனர்.
வேடிக்கை என்னவென்றால் இந்திராவின் மகன் கணவர் சஞ்சய் காந்தியும் மருமகளான, இன்றைய மத்திய அரசில் அமைச்சராக உள்ள மேனகா காந்தியும் அவரது அவசர நிலையை ஆதரித்தவர்கள்.
அவசரநிலைக்குப் பின் ஏற்பட்ட ஜனதா ஆட்சியில், தனக்கு கடவுச்சீட்டு (Passport) மத்திய அரசு அளிக்கவில்லை என்று மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பு என்ன தெரியுமா?
“அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21ன் படி மத்திய அரசு அவசரநிலை என்று அறிவிக்கவோ அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது என்று வழங்கிய தீர்ப்பு சரியான பதிலாக மேனகா காந்திக்கு அமைந்தது.”
இன்றைக்கு அத்வானி அவர்கள் அவசரநிலை திரும்ப வந்துவிடுமோ என்ற காரண காரியங்கள் இந்தியாவில் இருப்பது பற்றி சொன்னது ஆய்வு செய்யப்படவேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பறிக்கவோ அதில் உள்ள நெறிமுறைகள் தவறாக பயன்படுத்தவோ கூடாது என்ற எண்ணத்தில் அவர் அப்படிச் சொல்லி இருக்கலாம். இவையெல்லாம் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரிய பொருளாகக் கருதப்பட வேண்டும்.
எமெர்ஜென்ஸி காலகட்டத்தில் அரசியலில் ஈடுபாட்டோடு மாணவப் பருவத்தில் இருந்தபோது தினமணி, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் திரு.ராம்நாத் கோயாங்கோ நடத்திய ஏடுகள் மூலம் தினமும் காலையில் கல்லூரிக்குச் செல்வதற்குமுன்னால் அவசரநிலை சம்பந்தமான செய்திகளை தினசரி படித்துவிட்டுச் செல்வது என்னுடைய வாடிக்கையாக இருந்தது.
அப்போது இதழியல் துறையில் யாருக்கும் தலைவணங்காமல் திகழ்ந்த திரு. ராம்நாத் கோயாங்கோ அவர்களுக்கு வீரவணக்கமும் செலுத்த வேண்டும்
கல்லூரி மாணவர்களும் நக்சலைட்டுகள் பலரும் அப்போது கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கோழிக்கோடு பிராந்தியப் பொறியியல் கல்லூரி மாணவர் பி.ராஜன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார்.
அவரது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடந்தது. நெருக்கடி நிலையில் சாகடிக்கப்பட்ட ராஜனின் உடல் பெற்றோர்களுக்கே கிடைக்கவில்லை என்று அவர்கள் தாக்கல் செய்யத ஹைபியஸ் கார்பஸ் மனுவிற்குச் சொல்லப்பட்ட சாரமாகும். இவ்வழக்கு முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்டது.
நாற்பது ஆண்டுகள் சரியாக கடந்துவிட்டன. இந்திராகாந்திக்கு ஆதரவாக இருந்த பலரே, குறிப்பாக ஏ.கே.அந்தோணி, நண்பர் கே.பி.உன்னிகிருஷ்ணன், சரத் சின்ஹா, சங்கர் நாராயணன், துளசி தாஸப்பா போன்றோர் அவசரநிலை தேவைதானா என்று சொன்னதும் உண்டு.
அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்று ஜனதா ஆட்சி மலந்தது. நீதிபதி ஷா தலைமையில் அவசரநிலை காலத்தில் நடைபெற்ற அத்துமீறல்களை விசாரிக்க கமிசன் அமைக்கப்பட்டது. தமிழகத்திலும் நீதிபதி இஸ்மாயில் தலைமையிலான இஸ்மாயில் கமிசன் இதுகுறித்து விசாரணை நடத்தியது.
அவசரநிலையைக் குறித்து பல நினைவுகளும் கண்ட காட்சிகளும் தனியாக என்னுடைய குறிப்புகளில் எழுதியுள்ளேன். அவை விரைவில் நூல் வடிவில் வெளிவர இருக்கின்றன. எமெர்ஜென்ஸி கொடுமைகளை இதுபோன்ற சிறிய பத்தியில் சொல்லிவிட முடியாது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-06-2015.
*******
The Big Players of the
Emergency..
This article features some of the main players of the Emergency, the men and women who connived in the bid to kill democracy in India and reverse the victories of Independence.