கி.ராவின் “மனுசங்க” கரிசல்மண் கோவில்பட்டி பற்றிய தி இந்து தொடருக்கு கடிதம். – Karisal- Kovilpatti- Kee.Ra

0

அன்புடையீர்,
     வணக்கம்,

 கதைசொல்லி ஆசிரியர் கி.ரா அவர்களின், “மனுசங்க…” என்ற தொடர்
 தி இந்து தமிழ் ஏட்டில், செவ்வாய்க் கிழமை  மண்மணம் பத்தியில் தொடர்ந்து படித்துவருகிறேன்.

இன்றைய (02-06-2015) தொடரில் எங்கள் கரிசல் மண்ணின் கேந்திரநகரமான கோவில்பட்டி பற்றிய அடையாளங்களைச் சிறப்பாக சிலாகித்துள்ளார் கி.ரா. கதிரேசன் கோயில் பாதை, மூப்பனார் பேட்டை போன்றவையெல்லாம் கோவில்பட்டியின் அடையாளங்கள்.

இந்த மூப்பனார் பேட்டையில் தான் கிராமங்களிலிருந்து மாட்டுவண்டியில் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றிக் கொண்டுவந்து சம்சாரிகள் வியாபாரிகளிடம் விற்பது உண்டு. கதிரேசன் கோவில் பாதையில் உள்ள திலாக்கிணறுகளையும் நினைவுக்குக் கொண்டுவந்துள்ளார் கி.ரா.

இன்றைக்குப் பலர் குதிரைவாலி தானியத்தை எங்கே இருக்கின்றது என்று தேடியலைகின்றனர்.  குதிரைவாலி, ராகி, கம்பு, சோளம் என பல தானியங்களை விளைவித்த பூமிதான் கரிசல் மண். அன்றைக்கு இவையெல்லாம் அந்த மண்ணின் உணவுகளாக இருந்தன.

 கம்புதோசை, ராகிதோசை, சோளதோசை, ராகி களி என்பதெல்லாம் முக்கிய உணவுகள். மானாவாரியில் பயிராகும் கேரளாவில் சமைப்பது போல
பரு அரிசியான  “புழுதிபிரட்டி ” கரிசல் மண்ணில் விளைந்தது.  இந்த அரிசியின் மேற்பரப்பில்  சிவப்பு நிறங்களில் திட்டுத்திட்டாக இருக்கும். மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவாக இருக்கும்.

கி.ரா படைப்பின் நாயகன் சீனி நாயக்கர் வானம்பார்த்த கரிசல்காட்டின் சம்சாரி. அப்புராணி சப்புராணியாக வாழ்ந்தவர். இந்த மண்ணில் பாரதியும், வ.உ.சியும் பிறந்ததால் கோவில்பட்டியில் காங்கிரசும், பொதுவுடைமைக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இருந்தது.

பேரறிஞர் அண்ணா தி.மு.க-வை துவக்கியபோது, ஒன்றுபட்ட நெல்லைமாவட்டத்தில் தி.மு.கவை கோவில்பட்டியில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைத்தார்.  தினமணி ஆசிரியர். ஏ.என்.சிவராமன், காருக்குறிச்சி அருணாச்சலம், திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திகுளம் சுவாமிகள் எனப் பல ஆளுமைகள் உலா வாந்த நகர் கோவில்பட்டி.   விவசாயிகள் போராட்டங்களின் போது அதன் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு போராட்ட தளமும், களமுமாக இருந்தது கோவில்பட்டிதான் .

இவ்வாறான உயிரோட்டமான போராட்டக்களமான எங்கள் மண்ணைப்பற்றி கி.ரா அவர்கள் எழுதிவருவதை பலரும் விரும்பிப் படிக்கின்றார்கள்.  தி இந்துவுக்கு கரிசல் மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-06-2015.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons