கதைசொல்லி -Kathai Solli .

0


கதைசொல்லி மீண்டும் கொண்டு வந்திருப்பதில் உள்ளூர மகிழ்ச்சி நிறைய உண்டு. இடைப்பட்ட காலங்களில் பணிச்சுமைகளால் கதைசொல்லியை கொண்டுவர இயலாமல் போனதற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கதைசொல்லி வெளிவராமல் போனது பற்றி கி.ரா ஒருவார்த்தை கூட இதுவரைக்கும் என்னிடம் வாயெழுந்து சொல்லவில்லை. அவருக்கு வெளிச்சொல்லாத ஊமைக்காயம் போல வலியாக இருந்ததை உணரமுடிந்தது என்னால்.

தி.க.சி தன் கடேசி தருவாயில் அவருடைய ஈரமான கரங்களால்  என்னைப் பற்றிக் கொண்டு,  “ கதைசொல்லியை திரும்பவும் கொண்டு வந்துடுங்க கே.எஸ்.ஆர்” என்று கேட்ட வார்த்தைகள் இன்னும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தக் கரங்களுக்கு வாஞ்சை செய்து விட்டதாய் நம்புகிறேன்.

தெற்குச்சீமை மண்ணை நேசிக்கிறவர்களும், ஈழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும், இன்னும் எத்தனையோ பேரும் கேட்டுக் கேட்டு அழுத்துப் போய் கேட்பதையே நிறுத்தியிருந்தார்கள். இந்தக் கோடையில் கதைசொல்லியினைத் திரும்பக் கொண்டுவந்து, தமிழர்கள் வாழும் இருபத்தைந்துக்கும்  மேலான உலகநாடுகளுக்கும் கதைசொல்லியினை எடுத்துச் செல்லும் முயற்சியில் அத்தனைபேரையும் சமாதானப் படுத்தியதாயே எண்ணுகிறேன்.

வெய்யில் காலத்தில் நுங்குக் குலைகளை சைக்கிளுக்கு இருபுறத்திலும் கட்டிக்கொண்டு பதனி நுரைத்திருக்கும் ஈயப்பானையின் வாய்நுனியில் சிந்திவிடாமல் இருக்க உரச்சாக்கையும் சைக்கிள் ட்யூப்பையும்  கட்டிக் கொண்டு, கொழுத்தும் வெயிலில் லொக்குலொக்கென்று சைக்கிளை அழுத்திக் கொண்டு, வீதிவீதியாக வந்து நுங்கும் பதனியும் விற்றுப் போகும் மீசைக்காரப் பெரியவருக்கு அது வெறும் விற்பனை பண்டமாக மட்டுமா இருக்கமுடியும்?

 ஊரூராகச் சென்று பதநீரும், பனங்கிழங்கும், நுங்கும், பனம்பழமும் விற்கும் மனிதருக்கு உள்ளூர இருக்கும் ஆத்ம திருப்தியை வார்த்தைகளில் கொடுத்துவிட முடியாது.
அதேபோலத்தான் கதைசொல்லியை ஒரு ஆத்ம திருப்தியோடு கொண்டுவந்திருக்கிறேன். கூடவே பல இளையவர்கள் தங்கள் பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள்.

நவீனயுகத்தின் குளிர்பானங்களுக்கு மத்தியில் நம் மண்ணின் மாறாத வாசத்தோடு இனிக்கும் பதநீராக, நாட்டுப்புற படைப்புகளும், கிராமியத்தின் வாசனைகளும் நிரம்பியோடும் வெயிலோடையாக,  வயதான பெரியவர்கள் ஊருக்கு மத்தியில் அமர்ந்து ஒன்று கூடி பழங்கதை பேசும் எச்சம்படிந்துகிடக்கும் ஆலமரத்தின்  நிழல்திண்டாக,  தார்சாலையின் சூட்டில் கனன்று விடுமென்று குளத்தாங் கரையில் மாட்டுவண்டியை இறக்கி மரப்பைதாவைக் குளிரூட்டும் போது தானும் கொஞ்சம் காளைகளோடு குளிர்ச்சியைத் தழுவும் பொழுதுகளாக, கதைசொல்லியின் ஒவ்வொரு பக்கத்திலும் நம் மண்சார்ந்த பரிச்சயம் நிரம்பிக்கிடக்கின்றது.

சுருங்கச் சொன்னால், இந்த தலைமுறைப் பேரம்பேத்திகளை மடியில் அள்ளிப் போட்டு கதை சொல்லும் தாத்தாக்களின் பேரன்பை பேப்பரில் கொடுப்பதே கதைசொல்லியின் எளிய விளக்கம். தொடர்ந்து ஆதரவினை நல்கும் உங்கள் அத்தனை பேருக்கும் அன்பு.

 -ப்ரியங்களுடன் -கே.எஸ்.ஆர்.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons