தமிழக நதிநீர் பிரச்சனைகளும், நதிநீர் இணைப்பு பற்றி சில புரிதல்கள் வேண்டும். நவலவாலா குழு. River Linking and Water resources issues of Tamil Nadu – BN Navalawala Task Force

0

தாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம்  பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில்  வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான் கடைமடைப் பகுதியான தமிழகம் நீர்ப்பாசனம் பெற வேண்டும்.

இந்த நதிகள் மீது தமிழகத்திற்கு உரிமைகள் இருந்தும் அவை அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. தெற்கே குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின் அணைக்கட்டு மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.

தமிழகத்தின் முதல்வரான பெருந்தலைவர் காமராஜரும், கேரள முதல்வரான திரு.சங்கரும் இந்த அணையைத் திறக்கும் போது, “கேரள மக்களையும் தமிழக மக்களையும் பிரிக்க முடியாது, இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைதான் இருக்கின்றது, அதையும் மீறி நம்முடைய சகோதர பாசம் என்றும் அன்போடு நிலைத்திருக்கும் என்பதற்கு சாட்சியாக இந்த நெய்யாற்றின் இடதுகால் வலதுகால் பாசன வசதிகளை கேரளாவும் தமிழ்நாடும் உரிமையோடு  நாமிரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்வோம் என்று பேசிய பேச்சு இன்றைக்கு அர்த்தமில்லாமலும், எதார்த்தமில்லாமலும் போய்விட்டது.

சிலர் புரிதல் இல்லாமலேயே செண்பகத்தோப்பு போன்ற அணைகள் கட்டினாலே முழுமையாக தண்ணீர்வரும் என்று சொல்கின்றனர். செண்பகத்தோப்பு அணை 1989ல் தி.மு.க ஆட்சியில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று தி.மு.கவிலிருந்த திரு.வை.கோ, அன்றைய நெல்லைமாவட்டச் செயலாளர் டி.ஏ.கே. லக்குமணன்,  அமைச்சர் தங்கவேலு மற்றும் நானும் மலையின் மேல் சென்று அந்த இடத்தையெல்லாம் ஆய்வு செய்து அணையும் கட்டப்பட்டது.

கட்டப்பட்ட அணையில் இறுதிப்பணி முடிவு பெறுவதற்குள் 1991ல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1992-1993 காலகட்டங்களில் அந்த அணையின் கட்டப்பட்ட பகுதிகளை கேரளா அரசாங்கம் இடித்துத் தள்ளியது. இந்த விவகாரம் அன்றைக்கு  எந்தப் பத்திரிகையிலும் செய்தியாக வரவில்லை. அப்போது தொலைதொடர்பு ஊடகங்களெல்லாம் கிடையாது.

செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் மட்டும் தான் தண்ணீர் வரத்து வருகின்றது,  அணை நிரம்பி வழிகின்றது. மற்றகாலங்களில் அதிகமாக தண்ணீர் நிரம்புவது  கிடையாது.

அதேபோல தான் நெல்லைமாவட்டத்தின் உள்ளாறு, செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை கட்டினால் மட்டும் போதாது. கேரளாவில் உள்ள நீர் வரத்தும் வந்தால் தான் இந்த அணைகளால் முழுமையாகப் பயன் பெற முடியும்.

ஆனால்,  மேலே குறிப்பிட்ட நெய்யாறு, நெல்லைமாவட்டத்தின்
உள்ளாறு, அடவிநயினார் ,  செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை, முல்லைப்பெரியார், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு -புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி ஆகிய நீராதாரப் பிரச்சனைகளில் கேரளா தமிழகத்தோடு ஒத்துப் போக மறுக்கின்றது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்கள்  காவிரி, ஒகேனக்கல், பாலாறு, பெண்ணாறு பொன்னையாறு பிரச்சனைகளில் நமக்கு ஆதரவாக இல்லை.
இந்த நிலையில் செண்பகத்தோப்பு, உள்ளாறு அணைகள்  கட்டிமுடிக்கப்பட்டாலும் நீர் நிரம்பவேண்டியது அவசியம் . அதற்கு கேரளம் ஒத்துக் கொண்டு தண்ணீர் வரத்தை தடைசெய்யக்கூடாது.

1983லிருந்து நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்ற எனது
பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் கடமை என்று பார்க்காமல் அவசியம், அவசரமாக நாட்டின் நலனைக் கருதி நதிநீர் இணைப்பு வேண்டும் என்பதைப் புரிதலோடு நடவடிக்கை எடுக்கவேண்டும், அதற்கான குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்று சொல்லியும் மன்மோகன்சிங் அரசு 2012பிப்பிரவரியில் அளித்த தீர்ப்பைக்கூட நடைமுறைக்குக் கொண்டு வராமல்இருந்தது.

 நானும் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலுவும் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஷ் ரவுத்தை சந்தித்துப் பேசி ,
“நீங்கள் குழுவை அமைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப் போகிறேன்” என்ற பிறகுதான் மன்மோகன் சிங் அரசு ஒப்புக்கு குழு ஒன்றை அமைத்தது.  அந்தக் குழுவும் செயல்படாமல் இருந்தது.

கடந்த வருடம் பா.ஜ.க அரசு மோடி தலைமையில் அமைந்தபின்
திரும்பவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்தித்த பின் தான் பி.என் நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை செய்திகளாக, விளம்பரமாக வரவில்லை என்றாலும் எதோ ஒன்றைச் சாதித்தோம் என்ற மனதிருப்தி. தற்போது நதிநீர் இணைப்புப் பணிகளை முழுமூச்சாக இந்தக் குழு கவனிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் அமைத்த குழுவின் 80% பணிகள் முடிவுக்கு வந்து அது நிறைவு பெறாமலே காங்கிரஸ் அரசு முடக்கிவிட்டது. இதையெல்லாம் எனது கடந்த நதிநீர் இணைப்பு பற்றிய பதிவில் விரிவாகச் சொல்லியிருந்தேன்.

** நதிநீர் இணைப்பு குறித்து விரிவான பதிவுகள்.

http://ksr1956blog.blogspot.in/2015/03/pamba-achankovil-vaippar-link.html

http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html

செண்பகத் தோப்பு அணையை கட்டிவிட்டால் மட்டும் போதாது.
அதற்கு நீர்வரத்து வரும் வகையில், அச்சன்கோவில் -பம்பை-வைப்பார் இணைப்பும்  கேரளாவில் மேற்குநோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் தான் இந்த அணைகள் கட்டினாலும் நீர் வரத்து வந்து அதனால் பாசன வசதி கிடைக்கும் என்பது புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும்.

நீர்வரத்து இல்லாமல்  அணைகளைக் கட்டி என்ன பயன். இதுகுறித்து
பி.என் நவலவாலா குழுவுக்கு தங்கள் கருத்துகளை எழுதி பதிவு செய்யவேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும்.

இன்னொரு வேதனையான விசயம் என்றால் இந்த நவலவாலா குழுவின் முழுப்பயனும் தமிழகத்துக்குத்தான் வருகின்றது. இந்தக்குழுவை ஒடிசா, கேரளா, கர்நாடகா போன்ற அரசுகள் எதிர்க்கின்றது.  ஆனால் இந்தக் குழுவைப் பற்றி எந்த செய்தியும் தமிழ்நாட்டின் செய்தித்தாள்களில் இடம்பெறவில்லை என்பது கொடுமையான விஷயமாகும். தினமணி மற்றும் ஆங்கில இந்து மற்றும்  ஏட்டில் 7வது அல்லது 8வது  பக்கத்தில் மட்டும் தான் செய்தியாக வந்தது.

நடிகை திரிஷாவுக்குத் திருமணம் நடக்குமா என்பதைப் பெரிய செய்தியாகக் வெளியிடுகின்றார்கள். தமிழ்நாட்டின் நலன் கவனிக்கப்படவேண்டிய செய்தியில் அக்கறையில்லாமல் பத்திரிகைகள் இருப்பது வெட்கக்கேடான அவமானமான விஷயமாகும்.  குறைந்தபட்சம் இந்தப் பதிவைப் படித்தவர்களாவது தங்களுடைய நண்பர்களிடம் பகிர வேண்டுகிறேன்.

பி.என். நவலவாலா  குழுவுவிடம் பதிவு செய்யவேண்டியவை
1.  அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்படவேண்டும்.
2.   கங்கை காவேரி வைகை தாமிரபரணி நெய்யாற்றோடு இணைத்து கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பயன்பெறும்.
3.   கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பையை தமிழக வைப்பாற்றோரு இணைக்கவேண்டும் போன்ற முக்கிய பிரச்சனைகளைக் குறித்து இந்தக் குழுவிடம் நிறைவேற்றப்படவேண்டுமென்று மனுக்கள் அனுப்ப வேண்டும் .

இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் தான் நீர்வரத்து வரும் என்ற புரிதலோடு நாம் கடமையாற்ற வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-05-2015.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons