ஆதியில் நெல்லையில் கிறித்துவ நடைமுறைகள்
கிறித்துவ மார்க்கத் தொட்டிலாக நெல்லை மாவட்டம் விளங்கியது. இதற்கு ஆதாரமாக 1899இல் வெளியான சவுரி ராயப் பிள்ளை வம்ச வரலாறு என்ற வெளியீடு பல கிறித்துவ வரலாற்றுச் செய்திகளை சொல்கின்ற ஆவணமாக இன்றும் திகழ்கின்றது. திருநெல்வேலிக்கு தெற்கே வடக்கன்குளம் செட்டிப் பிள்ளை சமுதாயத்தைச் சேர்ந்த மதுரேந்திரம் பிள்ளை குடும்பம் ஒன்று கத்தோலிக்க மதத்தைத் தழுவியது. இக்குடும்பம் நாயக்கர் மக்கள் காலத்தில் நிறுவப்பட்ட முக்கியமான தேவாலயமான காமநாயக்கன்பட்டி என்ற ஊருக்கு இக்குடும்பம் தொழில் ரீதியாக குடியேறினர். அங்கு குடியேறிய மதுரேந்திரம் பிள்ளை சிறிது காலம் படித்துவிட்டு தானாகவே படிப்பறிவை வளர்த்துக் கொள்ள முனைந்தார். பாடல்கள், எழுத்துகள் ஓலைச்சுவடியில் எழுதும் ஆற்றல் இவருக்கு ஏற்பட்டது.
திருமணமான பிள்ளை அச்சன்குளத்திலும் பல சரக்கு கடை நடத்தினார். நாட்டு வைத்தியராகவும், பச்சிலை மருந்துகள் வழங்குபவராகவும், காமநாயக்கன்பட்டி வட்டாரத்தில் பிரபலமானார். இவருக்கு பிறந்த குழந்தைகள் பிறந்ததும் இறந்து விட்டன. எஞ்சிய மன்று குழந்தைகளோடு தன்னுடைய சொந்த ஊரான வடக்கன்குளத்திற்கு சென்றார். அந்த குழந்தைகளில் ஒருவர் தான் மரிய சவுரி ராயன் என்று குறிப்பிடுவர். இந்த சவுரி ராயன் தன் தகப்பனார் சேர்த்து வைத்த கிறித்துவ சமய ஓலைச்சுவடிகளைப் படித்தார். கத்தோலிக்கத்தை விட்டு சி.எம்.எஸ்.ஸிற்கு மாறினார். அதில் போதகராக பணியாற்றினார்.
இவர் கண்ட மத சம்பிரதாயங்களை 1864இல் இவருடைய புதல்வர் தேவசகாயம், சவுரிராயர் சொல்ல சொல்ல பதிவு செய்தார். தேவசகாயம் நீதிமன்றத்தில் சிராசுதாராக இருந்த காரணத்தினால் மேலும் தங்களுடைய பூர்வீகத்தை பற்றி செய்திகளை சேகரித்து விரிவான ஓலைச் சுவடிகளும் காகிதங்களும் எழுதி வைத்தார். இதற்கு பல இடங்களுக்குச் சென்று ஆதாரங்களை சேகரித்து முழுமையான சவரி ராய பிள்ளை வம்ச வரலாறு என்று வரலாற்றை நிறைவு செய்து டெம்மி முறையில் 1899இல் சிறு வெளியீடாக வெளியிடப்பட்டது. நூலின் அட்டையில் மகனால் தொகுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பக்க அளவில் ஆங்கிலத்தில் ஒரு குறிப்பும், மொத்தத்தில் நூல் எண்பது பக்கங்களைக் கொண்டுள்ளது. 100க்கு குறைவான அளவிலேயே படிகள் அச்சிடப்பட்டன. அந்நூலில் ரெய்னீஸ் அய்யரிடம் ஏற்பட்ட தொடர்பு, ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று ரூபாய் இருந்தால் போதும் என்ற செய்தி, சாதாரண குடும்பங்கள் படுகின்ற பொருளாதார கஷ்டங்கள் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. பஞ்சு விலை உயர்வு, கிறித்துவ திருமண முறைகள், பெண்களின் பிரச்சினைகள் போன்ற சமூக அமைப்பு செய்திகளும் அந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. வடக்கன்குளத்தின் பூர்வீக ஊரின் அமைப்பு, ரெய்னீஸ் அய்யர் காலத்து பாளையங்கோட்டை பற்றிய குறிப்புகள் உள்ளன.
சவுரி ராய வம்ச வரலாற்று நூல் குறிப்புகள்:
தமது 26ஆவது வயதில் தமது தாய்மாமன் மகளான அருளாயியை 1791 ஆகஸ்ட் 15ஆம் நாள் காமநாயக்கன்பட்டி பரலோக மாதா தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார். அப்போது மணமகளின் வயது பன்னிரண்டுதான்! திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து மணமகள் பூப்பெய்தினாள். தனது திருமணம் குறித்து மதுரேந்திரம் பிள்ளை எழுதி வைத்திருக்கும் குறிப்பானது அன்றையத் தமிழகக் கத்தோலிக்கர்களிடையே நிலவிய திருமண முறையை எடுத்துரைக்கிறது. கத்தோலிக்க குருவினால் தேவாலயத்தில் நடத்தி வைக்கப்படும் திருமணம் “ஞானக் கல்யாணம்” அல்லது “கோவில் கல்யாணம்” எனப்படும். அதன்பிறகு, சாதிமுறைக்கேற்ப வீட்டில் ஒரு திருமணம் நிகழும். இது “வீட்டுக் கல்யாணம்” எனப்படும்.
விஞ்ஞாபனம் என்ற தலைப்பில் முன்னுரை தொகுப்பாசிரியர் எழுதியுள்ளார். அக்காலத்தைய அணிகலன்கள், வழங்கிய பழமொழிகள், இறந்தவரைச் சுமந்து செல்லும் பாடை வகைகள், நம்பிக்கைகள், தமிழ்க் கத்தோலிக்கரின் திருமண முறை, கொள்ளைக்காரர்கள் நிகழ்த்திய கொள்ளைகள் குறித்த செய்திகள், கிரைய பத்திரங்களின் அமைப்பு, சமுதாயத்தில் பெண்களின் நிலை, அமெரிக்காவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் விளைவாக கரிசல் நிலப் பகுதியில் பஞ்சு விலை உயர்ந்து அதனால் லாபம் பெற்ற பஞ்சு வியாபாரி எனப் பல செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
குருக்கள் ஆசாரம் பற்றி பக்கம் 56-57இல் குறிப்பிடப்பட்டுள்ளது வருமாறு: “.. .. தத்துவ போதக சுவாமி நாள் முதல் பிராமணர், பிள்ளைமார், முதலிமார், மேல்சாதிக்காரரை வேதத்தில் சேர்க்க வேண்டுமென்று செய்த பிரயத்தனம் எழுதி முடியாது. அவர்கள் முயற்சியும் கை கூடி வந்தது. மேல் குலத்தோரை ஆதாயப்படுத்திக் கொள்வதென்று குருக்கள் தங்கள் சாதி ஊண், உடை, நடை, வழக்க ஒழுக்கங்களை மாற்றி இத்தேசத்துப் பிராமணக் குருக்கள், மண்டாரச் சன்னதிகளுடைய ஆசாரங்களை அனுசரித்துக் கொண்டார்கள்.. ..” “முக்குவர் முதலிய கடற்கரை சபை, கீழு சாதி சகைபளை விசாரிக்கிற குருக்கள் வேறே. உள்நாட்டில் மேல் சாதி சபைகளுக்குக் குருக்கள் வேறே. அந்தக் குருக்களுக்குப் பண்டாரக் குருக்கள் என்றும், இந்தக் குருக்களுக்கு சுவாமிகள், ராச ரிஷிகள் என்றும் பேர். கடற்கரை கோவில்களிலும் மேல் சாதிக்காரர் கோவில்களிலும் பூசை மந்திரங்கள் ஒன்றேயானாலும், பூசை முறை, ஆலய முறை, வழக்கங்களில் அநேக வித்தியாசங்கள் உண்டு. பூசை உடை, சாதாரண உடை இதுகளிலும் இருவகை குருக்களுக்கும் வித்தியாசம் உண்டு. பண்டாரக் குருக்களுக்குக் கருப்புச் சட்டை. அவர்கள் இந்த ராச ரிஷிகளை நமஸ்காரம் பண்ண வேண்டும். ஒருவருக்கொருவர் வெளிக்குத் தொட்டுக் கொள்கிறதாவது ஐக்கியம் பாராட்டுகிறதாவது இல்லை. ராச ரிஷிகள் பெரும்பாலும் பல்லக்கில் அல்லது ரிஷபத்தில் சவாரி போவார்கள். காவி முக்கிய அகலப்பட்டுக்கரை வேஷ்டி கட்டி, காவி சொக்காய் போட்டு, கழுத்தில் செபமாலை தரித்து, தலையில் நீண்ட செகப்புக் குல்லா வைத்து, காவி சிரசு வேஷ்டி போட்டிருப்பார்கள். நெற்றியில் சந்தனப் பொட்டிட்டிருக்கும். காதில் கடுக்கண், காலித் குமிழ் பாதகுறுடு. சனங்கள் சுவாமிமார்களை தெய்வம் ரிஷிகளாக மகா பயபக்தியோடு வணங்குவார்க.ள அவர்கள் வாயில் சாபமான மொழி வந்துவிட்டால் கேடு தப்பாமல் வந்து பலிக்கும் என்று நடுங்கிப் பயப்படுவார்கள். அவர்கள் சுவாமி போகிற வாகனத்துத் தடத்தைத் தொட்டு முத்திக் கொள்வார்கள். குருக்கள் தெரு வழியாய்ப் போகிறதைக் காணுகிற சனம் சிறு பிள்ளை முதலாய் குபீரென்று முழங்காலில் நிற்கும். சுவாமியார் ஆசிர்வாதம் செய்து கடந்து போவார். அஞ்ஞான விக்கிரகங்கள், பேய், பிசாசுகளை மதிக்கிற, வழிபடுகிற வகையாய் எந்த அற்பக் கிரியையும், எந்தத் துர்நடக்கையும் சபையில் நடப்பதற்கு எள்ளளவும் இடங்கொடாமல் கண்டிப்பாய்ச் சிட்சித்து ஆக்கைன செய்வார்கள். பண அபராதம், அஞ்சுமணிக் குறடாவினால் அடிக்கிறது, தலையில் மண் பெட்டி ஏற்றி முழங்காலில் வைக்கிறது, முள் முடி வைத்து தெருச் சுற்றச் செய்கிறது, பேய் முகங்கட்டித் தெருச் சுற்றுகிறது முதலிய ஆக்கினைகள் உண்டு. ஆனால் தேசாசாரங்கள், சாதியாசாரங்கள் முதலியவைகளில் தலையிட்டுச் சனங்களை இம்சைப்படுத்துகிறதில்.”
வடக்கன்குளம் கோவில் பற்றிய குறிப்புகள், பக்கங்கள் 59-61 வரையில்: “பரஞ்சோதி நாத சுவாமி அஸ்திவாரம் போட்டு, மதுரேந்திய சுவாமி கட்டி முடித்தது டூம் 1749 என்று ஒரு கல்லில் வெட்டிப் வதித்திருந்தது. இது சிலுவை மாதிரி கோவில். கிழக்கே பார்த்தது. கோவிலை இரண்டு பங்காய்ப் பிரித்துத் தென்வடலாய் அளி போட்டிருந்தது. முன் பங்கில் வெள்ளாளர், முதலியார், ராசாக்கள், கம்மாளர் முதலிய சூத்திரரும், பின் பங்கில் கீழ்சாதிக்காரருமிருப்பார்கள். பின்பங்குத் தளம் தணிவாயிருந்தது. கோவில் பீடத்தில் வேலை செய்கிறதும், பூசையில் உதவி மந்திரங்கள் சொல்லுகிறதும், பாட்டுக்கள் படிக்கிறதும், தீபம் ஏற்றுகிறதும் மற்றும் கோவிலுக்குள் செய்யக்கூடிய கைங்கிரியங்கள், சிறப்புகள், சகலமும் தேர் திருநாள் சப்பரம் எழுந்தேற்றம் சகலமும் பிள்ளைமார் முதலிமாருக்கு மாத்திரமே உரித்து. அதாவது, இந்துக்கள் ஆலயத்தில் சுவாமி கைங்கிரியங்கள் பிராமணர், ஓதுவார்களுக்கு மாத்திரம் பாத்தியப்பட்டது போலவே இங்கேயும் பிள்ளைமார் முதலிமார்களுக்கு மட்டும் பாத்தியமுடையதாக வைத்துக் கொண்டார்கள்.
காலைப் பூசையில் அந்திப் பிராத்தனையில் படிக்கிற தேவாரப் பதிகங்கள், பதங்கள், கீர்த்தனைகள் மற்றும் தமிழ் ஸ்தோத்திரங்கள் மேல் சாதிக்காரர் மாத்திரமே படிக்கலாம். வடக்கன்குளத்துக் கோவிலில் ஆதியில் பாடுகிற தமிழ்ப் பதங்கள் சிலது வீரமாமுனிவர் செய்யுளாயிருக்கலாம். ஆனால் போத்தியுடைய காலத்திலும் அதற்குப் பிற்காலத்திலும் பாடுகிறவைகள் ஏகதேசம் எல்லாம் வடக்கன்குளத்துப் பிள்ளைமார்களே உண்டு பண்ணினது. விசேஷம், துரை வீடு கணக்கு மரிய தாசுப் பிள்ளை செய்யுள், போத்தியுண்டு பண்ணினதுமுண்டு. இன்னின்னார் செய்யுள் இன்னின்னதென்று திட்டமாய்ச் சொல்ல ஏதுவில்லை. இந்தந்தத் திருநாளுக்கும் அர்ச்சிட்டவர் நாளுக்கும் அதற்குரிய பாட்டுகளுமுண்டு. எழுந்து நின்றும் இருந்து கொண்டும் பாடாமல் முழுங்காலில் நின்று பாடுவார்கள். ஒரு பாட்டு ஒரு விருத்தம் பாடி முடிந்தவுடனே மேளகாரன், டமடமா, டமடமாவென்று மேளடிப்பான். பாட்டுக்களெல்லாம் முக்காலே மூன்று மாகாணிப் பங்கு தேவமாதாவுக்கு ஸ்தோத்திரமாகத்தானிருக்கும். கோவிலில் விபூதி கொடுப்பார்கள். அதற்கு ஒரு ஆண் நியமித்திருக்கும். அவர் காவித் துணியும் தலையில் சுற்றிக் கொண்டு செம்புக் கடுக்கனும் போட்டுக் கொண்டு கோவிலில் விபூதி கொடுப்பார். அந்த விபூதியை வாங்கி எல்லாரும் பூசிக் கொள்வார்கள். வீட்டில் விபூதி செய்து பூசக்கூடாது. போத்தியுடைய தகப்பனார், கோவிலில் மேளம், மிருதங்கம் சேவிக்கிறது ஒச்சர், வேதக்காரக்கணியார், கீழ்சாதிக்காரர், மேல்சாதிக்காரரைத் தாண்டி, அல்த்தார் கிராதிக்கிட்ட வரக் கூடாததினால், சுவாமியார் அவர்களிருக்கிற இடத்து அளிக்குமுன் போய் அவர்களுக்கு நன்மை கொடுப்பார். சாணார் இருக்கிற இடத்தில் ஒரு தீர்த்தக் கல்தொட்டியும் வெள்ளாளர் இருக்கிற இடத்தில் ஒரு தீர்த்தக் கல்தொட்டியும் இருக்கும். கர்த்தர் பிறந்த திருநாளில் குழந்தை இயேசுநாதர் சுரூபத்துக்கு வேள்ளாளர் முதலிமார் காணிக்கை வைத்துத் தொட்டு முந்தி செய்த பின்பு, சாணாரும் அப்படிச் செய்யும்படியாக அவர்களிடத்து சுரூபம் கிட்டக் கொண்டு போய் வைக்கப்படும். பாடுபட்ட திருநாளன்றும் பாடுபட்ட சுரூபத்தை முத்தி செய்வதற்கு அதுவே மாதிரியான ஏற்பாடு செய்திருக்கும்.
திருமண பழக்க வழக்கங்கள், பக்கங்கள் 61-63 வரை:
சுவாமிமார் சபையில் கலியாணம் முடித்து வைக்கிற முறையென்னவென்றால், கோவிலில் பூசைக்கு முன்னேயாவது பூசைக்கு பின்னேயாவது அல்லது வேறு எந்த நேரத்திலேயாவது கோவிலில் சாமிக்கு முன் மாப்பிள்ளையும் பெண்ணும் முழங்காலில் நிற்பார்கள். இருவருக்கும் பின்னால் உபதேசியார் நிற்பார். சுவாமியார் மாப்பிள்ளையைப் பார்த்து உன் பேர் என்னவென்று கேட்க, அவன் தன் பெயரைச் சொல்லுவான். பெண் பேரையும் அப்படியே கேட்டு அறிந்து கொள்வார். (சில வேளை பெண் தன் பேரைச் சொல்லக் கூடாதிருக்கும். திருட்டாந்தமாக, தன் பேர் சவுரியம்மாள் என்றும், மாப்பிள்ளை பெயர் சவுரிமுத்து என்றுமிருந்தால், பெண் தன் பேரைச் சொல்லமுடியாது. அப்போது உபதேசியார் சொல்லுவார். பெண் தானே வாயினால் உரக்கச் சொல்லித்தான் தீர வேண்டுமென்று சுவாமியார் இம்சைப்படுத்துகிறதில்லை) அப்போது மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவர் கைமேல் ஒருவர் கையை வைக்கச் சொல்லி (சவுரிமுத்துவாகிய) நீ இங்கேயிருக்கிற (சவுரியம்மாளைத்) திருச்சபை யாசாரத்தின்படி உனக்குச் சொந்தப் பெண் சாதியாக ஒப்புக் கொள்ள சம்மதிக்கிறாயா என்பார். ஆமென்பான். பெண்ணைப் பார்த்து (சவுரியம்மாளாகிய) நீ இங்கே இருக்கிற (சவுரிமுத்துவை) திருச்சபை யாசாரத்தின்படி உன்னுடைய சொந்தப் புருஷனாக ஒப்புக்கொள்ள சம்மதிக்கிறாயா என்பார். அவளும் ஆமென்பாள். அப்போது உபதேசியார் செப்பில் கொண்டு வந்திருந்த திருமாங்கலியத்தை ஒரு தாம்பாளத்தில் வைத்து சுவாமியாரிடத்தில் நீட்டுவார். அவர் லத்தீனில் இரண்டொரு வார்த்தை சொல்லி மந்திரித்து, அதாவது ஆசீர்வாதம் செய்து, திருமாங்கலியத்தைக் கையில் எடுத்து மாப்பிள்ளையிடத்தில் கொடுக்க, அவன் அதை வாங்கிப் பெண் கழுத்துக்கு நேரே நீட்டுவான். பெண்ணுடைய சம்மந்தி யாராவது தாலியைப் பெண் கழுத்தில் கட்டுவாள். இதற்குள்ளாக சுவாமியார் நாலைந்து வார்த்தையில் லத்தீனில் ஏதோ ஒரு மந்திரம் சொல்லுவார். உபதேசியார், கலியாணக்காரருக்காக ஒரு பரமண்டல மந்திரம் வேண்டிக் கொள்ளுங்கோவென்பார். எல்லாரும் அந்த மந்திரஞ் சொல்லுவார்கள். ஆக இவ்வளவு வேலையும் இரண்டு நிமஷத்திற்குள் முடிந்துவிடும்.
பிள்ளைமார் முதலிமார் பெரும்பாலும் வீட்டுக் கல்யாணஞ் செய்கிறவர்கள். சுவாமியார் திருமங்கிலியத்தை மந்திரித்து மாப்பிள்ளையிடத்தில் கொடுத்தவுடனே அதை வாங்கித் தன் ஆட்கள் வசத்தில் கொடுத்து செப்பில் வைத்துக் கொள்வார்கள். மாப்பிள்ளையும் பெண்ணும் கோவிலிலிருந்து அவரவர்கள் பாட்டுக்குப் போய் விடுவார்கள். அப்புறம் தாங்கள் நிச்சயித்த சுபதினத்தில் மணவறைப் பந்தலில் தங்கள் சாதி இந்துக்கள் என்னென்ன முறைமையாய் திருமங்கிலியம் தரித்து கலியாணஞ் செய்து கொள்வார்களோ அதே பரிகாரமாக பலியாணச் சடங்கு நிறைவேற்றுவார்கள். பெண்ணுக்கு பூவுந் தேங்காயும் கொடுக்கிறது. மாப்பிள்ளைக்குக் காப்புக் கட்டுகிறது முதல் கதலி குளிப்பு மஞ்சள் நீராட்டு வரை லோக சாஸ்திரத்தின் அக்கியானமில்லாமல் சாதியாசாரத்தின்படியே சகலமும் சரிவர நடக்கும். மணவறையில் தேவமாதா சுரூபம், பாடுபட்ட சுரூபம் வைத்திருக்கும். அக்கினி வளர்த்து தூபம் போடுவார்கள். உபதேசியார் சமையத்துக்கிசைந்தபடி சில்வா சின்னேனா, நரருப்பியோ, அஸ்துமான பாலஸ்தனோப்பிரபு, பிதாகா சுதா ஆருகா நமோ நமா என்னும் மந்திரத்தையும் பின்னும் என்னமெல்லாமோ கத்தோலிக்க வேத மந்திரங்களை சமஸ்கிருதத்தில் சொல்லிக் கொண்டிருப்பார். மாப்பிள்ளை தன் கையினால் திருமாங்கலியத்தை பெண்ணின் கழுத்தில் கட்டி ஒரு முடிப்பு போடுவார். மாப்பிள்ளையின் சகோதரி கூட நின்று அதை நன்றார் முடிந்து போடுவாள். நம்முடைய செட்டிப் பிள்ளைமார் ஆசாரப்படி புருஷன் உயிள்ளளவும் அப்படியே இருக்கும். திருமங்கிலியம் பெருகிப் போனால் உள்ளங்கழுத்தில் வைத்துக் கொண்டே புது இளையிட்டுக் கட்டிக் கொள்வார்கள். பழைய இளையை எண்ணைக் கலையம் வைத்திருக்கிற உரியில் கட்டி வைப்பார்கள்.
வடக்கன்குளத்தில் பணியாற்றி வந்த பிரான்சிஸ் மிராண்டா என்ற குரு, திருமணத்தின் போது தாலி கட்டுவதற்கு தடை விதித்து, மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று 1820ஆம் ஆண்டில் கட்டளையிட்டார். இதற்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. சாமியாரின் கட்டளையை மீறி ஒன்பது திருமணங்கள் வழக்கம்போல் தாலி கட்டி நிகழ்ந்தன. இவற்றுள் உபதேசியார் சவுரி ராய பிள்ளையின் திருமணமும் ஒன்று. இவ்வாறு திருமண முறை தொடர்பாக ஏற்பட்ட மனத்தாங்கலினால் சிலர் சமய விலக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் கோபம் கொண்டு சாமியாரைக் கேலி செய்யும் பாடல்களை இயற்றித் தெருக்களில் பாடினார்கள். அத்தகைய பாடலொன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இறுதியில் இப்பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டு தாலி கட்டும் வழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இந்நூல் இன்றைக்கும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. இதுகுறித்துப் பேராசிரியர்கள் தே. லூர்து, ஆ.சிவசுப்பிரமணியம் ஆகியோர் பல வரலாற்றுக் கட்டுரைகளை தீட்டியுள்ளனர்.
– புதிய பார்வை, ஏப்ரல் 1-15, 2006






