தமிழ்ப் பதிப்புத் துறையின் மாண்பு!

0

எழுத்துலகில் இன்று பல பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன. சுவடிகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியச் செல்வங்கள் மட்டுமல்லாமல், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றில் உள்ள கருத்துகள் அச்சுக்கு வந்த பின்புதான் இலக்கியத்தின் மாண்பை நாம் அறிய முடிந்தது. தமிழில் சங்கப் பாடல்களாக இருந்தது, பிற்காலத்தில் விரிவடைந்து கவிதைகள், கதைகள், சொலவடைகள், விடுகதைகள், பழமொழிகள், அகராதிகள், புதினங்கள் என பரவி விரிந்தது. அனைத்துத் தரப்பினரும் தமிழ் மொழியின் ஆழத்தையும், அதிர்வையும், அதிசயத்தையும் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தது அச்சுக் கலையாகும். அந்த அச்சுக் கலையும் பதிப்பித்த நூல்களும் இல்லையென்றால் தமிழ் மொழியின் தொன்மை, நாகரிகம், பண்பாடு போன்றவற்றை அறிந்திருக்க முடியாது. இதனை கொண்டுதான் தமிழ் மொழியின் ஆதிக்கம் இன்று உலகளவில் பேசப்படுகிறது.

செம்மொழி மாநாடு நடக்கும் தருவாயில் தமிழ்த் தாத்தா உ.வே.சா.வை நினைவில் கொள்ளாமல் இருக்க முடியாது. தமிழகம் முழுவதும் அவர் அலைந்து பெற்ற ஓலைச்சுவடிகளை, வசதியற்ற அக்காலத்தில் நூல் வடிவில் வெளிக் கொண்டு வந்தது அசாதாரண நிகழ்ச்சியே.

செம்மொழி தமிழ் உயராய்வு மய்யத்தில் தற்போது 41 நூல்கள் சுவடிகளோடு ஒப்பிட்டு நூல்களாக வெளியிடும் பணி நடைபெற்று வருகின்றது. ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரனார், உ.வே.சா. போன்றோர் கடந்த காலங்களில் இத்தகைய பணிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர்.

அக்காலத்தில் பதிப்பிக்கும்போது பல சிரமங்கள் இருந்தன. முதன் முதலாக பனுவல்களில் முன்னும் பின்னும் உரிய விளக்கங்களும் எழுதி வெளியிட்டது, படிப்படியாக அச்சுப்பணிகள் துவங்கின. 500 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது அச்சு இயந்திரம். தற்போது அவையெல்லாம் கணினி மயமாகிவிட்டன.

இப்புவியில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் காலங்களில், அங்குள்ள மற்ற குழுக்களோடு தொடர்பு கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு சில குறியீடுகளை கொண்டிருந்தனர். அதில் ஒன்றுதான் எழுத்து. இந்த எழுத்தின் மூலம் தங்களது தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர். அக்காலகட்டத்தில் இந்த எழுத்தை பயன்படுத்துகின்ற வகையில் கிடைக்கப்பெற்ற அரிய செல்வம்தான் அச்சுக் கருவி.

இலண்டனில் அமைந்துள்ள உலகில் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகம், கிரகாம் ஷா என்பவர் தொகுத்த The South Asia and Burma. Retrospective Bibliogrphy என்ற நூலை வெளியிட்டுள்ளது. அந்நூலில் அவர் தெற்காசிய மற்றும் பர்மாவில் அச்சு வடிவில் வெளியான நூல்களை பற்றி ஆராய்ந்துள்ளார். இதில் அவர் மூன்று காலகட்டங்களாக பிரித்து தொகுத்துள்ளார். கிரகாம் ஷா குறிப்பிட்டுள்ள 1804-1867, 1868-1900 ஆகிய காலகட்டங்களில் வெளிவந்துள்ள நூல்களின் மூலம் தமிழக அச்சுக் கலை எவ்வாறெல்லாம் ஏற்றங்களை கண்டுள்ளது என்பதை நாம் உணரலாம்.

பதினோறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த கிழக்கிந்திய கம்பெனியினர் படிப்படியாக தமது ஆதிக்கத்தை இங்கு நிலை நாட்டினர். அக்காலத்தில் அவர்கள் தங்களது அரசின் சட்ட திட்டங்கள், அறிக்கைகள் போன்றவற்றை மக்களிடையே கொண்டு செல்ல அச்சு இயந்திரங்களை பெருமளவில் பயன்படுத்தினர். இதில் அவர்கள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளையே முதலில் பயன்படுத்தினர். நம்மை ஆண்டவர்கள் நிர்வாகத் துறையில் இந்திய மொழிகளில் பிற்காலத்தில் பயன்படுத்த தொடங்கினர்.

அக்காலக்கட்டத்தில் கிறித்துவ மதத்தை பரப்புவதற்காக பல கிறித்துவ சபைகளும் இங்கு வரத் தொடங்கின. அன்று பைபிள் மொழிப்பெயர்ப்புகள் மற்றும் பல சிறு சிறு கையேடுகள் மூலம் கிறித்துவத்தை பரப்பின. விவிலியத்தை மொழியாக்கம் செய்ய உதவியாக இருந்தவர், உடலெல்லாம் விபூதியை அணிந்து கொண்டு வலம்வந்த சிவபக்தரான யாழ்ப்பாண ஆறுமுகநாவலரே. தங்களது மதப் பிரச்சாரத்திற்காக அவர்கள் அச்சு இயந்திரங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தினர். பின்னர் இவர்களே பல கல்விக் கூடங்களை நிறுவினர். அதற்கு தேவையான பாட நூல்களையும் அச்சிலேயே கொண்டு வந்தனர். இத்தகைய நூல்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் வெளியிடப்பட்டன. இந்த நேரத்தில் 1843இல் முதன் முதலில் சென்னையில் கல்விக்கூடமும், பின்னர் 1857ஆம் ஆண்டில் பல்கலைக் கழகமும் துவக்கப்பட்டடது. இவற்றிற்கான பாட நூல்கள் எல்லாம் அச்சு வடிவில் நூலாக வெளிவந்தது. இந்த காலத்தில் தான் தமிழில் அச்சுக்கலை சிறப்புற மேலோங்கி வளர்ந்தது எனலாம்.

உலகம் சுற்றுகிறது என்று சொன்னதற்காக, கி.பி.1600ஆம் ஆண்டில் புரூனோ மதவாதிகளால் கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாகவே மடாலயங்களை எதிர்த்து ஐரோப்பாவில் பல அமைப்புகள் தோன்றி போராடின. மடாலயங்களுக்கு எதிராக ஓவியக் கலைஞர்கள் தங்கள் ஓவியங்கள் மூலமாக எதிர்ப்புகளை தெரிவித்தனர். மறுமலர்ச்சிக் காலத்தில் பலர் அச்சு கருவிகளைப் பயன்படுத்தி புத்தகங்களின் மூலம், ஆதிக்கத்திற்கு எதிரான தமது கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது டார்வின், கார்ல் மார்க்ஸ் போன்றோரின் கருத்துக்கள் உலகில் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இதன் காரணமாக இங்கிலாந்தில் பல அமைப்புகள் உருவாகின. இதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. 1784இல் கல்கத்தாவில் ஆசியவியல் ஆய்வுக் கழகம் மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினருக்கு பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனங்களில் தாமஸ் ஆர்டிரவுட்மன், வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் இந்திய கலாச்சாரம், பண்பாடு, மொழி, தொல்லியல், நாணயங்கள், அகழ்வாராய்ச்சிகள் போன்றவற்றை பற்றி பல சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல் சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் 1812ஆம் ஆண்டில் எஃப்.டபிள்யு. எல்லிஸ் சென்னைக் கல்வி சங்கத்தை துவக்கினார். இதன் பின் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இவையே தமிழில் புத்தகப் பயன்பாட்டை தோற்றுவித்தன. சென்னைக் கல்வி சங்கம் தமிழில் புத்தகங்கங்கள் மூலம் கீழ்திசை பள்ளிகளுக்கான பணிகளை முதன் முதலில் துவக்கியது. இவை சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்றைக்கும் காட்சிப் பொருளாக உள்ளன.

இச்சங்கத்தில் திருச்சிற்றம்பல தேசிகர், தாண்டவராய முதலியார், வேங்கடாசல முதலியார் போன்றோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். திருச்சிற்றம்பல தேசிகர் எழுதிய இலக்கணச் சுருக்கம், இராமாயண உத்தரகாண்டம், தாண்டவராய முதலியார் தொகுத்த கதாமஞ்சரி, பஞ்சதந்திரக் கதை, இலக்கண வினா விடை போன்ற நூல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஹென்றி ஆர்ட்னெஸ், வேங்கடாசல முதலியார் இணைந்து உருவாக்கிய தமிழ் அரிச்சுவடியும் சிறப்பு வாய்ந்ததாகும்.

கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றோர் படைத்த திருநெல்வேலிச் சீமை சரித்திரம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், திருவாசகம், சதுரகராதி போன்றவை வெளிவரத் துவங்கின. வீரமாமுனிவரின் சதுரகராதி தான் முதலானது. திருவாவடுதுறை சைவ ஆதினம் இதுவரை ஆயிரக்கணக்கான நூல்களை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சலுகை விலையில் பதிப்பித்ததையும், அதுபோன்று தர்மபுரம், திருப்பனந்தாள் மடங்களும் இந்தப் பணிகளை மலிவு விலையில் வழங்கிய வரலாற்றை மறுக்க முடியாது. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா., தண்டபாணி தேசிகர் போன்றோரின் நூல்கள் வெளிவர திருவாவடுதுறை மடம் பெரிதும் துணையாக நின்றது.

சார்லஸ் மெட்காப் என்பரால் 1835இல் கொண்டு வரப்பட்ட அச்சுத் தடைச் சட்ட நீக்கம் என்பதன் மூலம் இந்திய மொழிகளில் புத்தகங்கள் வெளிவரத் துவங்கின. இதன் பிறகு 1867இல் தமிழ் நூல்கள் பதிப்புரிமை பெறும் சட்டம் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், சி. இராமலிங்கம் ஆகியோர் தமிழ் அச்சில் புத்தக உருவாக்கத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்களாவர். இதில் ஆறுமுக நாவலர் கிறித்துவப் பாதிரிமார்கள் மற்றும் அரசு நிர்வாகிளோடு தனக்கு இருந்த தொடர்பை பயன்படுத்தி ஐரோப்பிய கல்வி முறையை தெற்காசியப் பகுதிகளுக்கு கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக கொண்டு வரப்பட்ட நூல்களுக்கு மாற்றாக தமிழில் சைவ சமய நூல்களை அச்சிடுவதற்காக முதன் முதலாக ஒரு அச்சகத்தை நிறுவினார். இந்த காலகட்டத்தில் தமிழில் பட்டினத்தார், திருமூலர், அவ்வையார், அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோரின் பாடல்கள் அச்சிலேறி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அக்காலத்தில் பக்தி நூல்களே பெரும்பாலும் அச்சிடப்பட்டன. பெரிய புராணம், திருமுருகாற்றுப்படை போன்ற சைவ நூல்களுக்ழு உரை எழுதியதுடன் அவற்றை பதிப்பித்தும் வந்தார் ஆறுமுகநாவலர்.

1967இல் கொண்டு வரப்பட்ட நூல் பதிவுச் சட்டத்தின் மூலம் நமது பண்டைய கால புத்தகங்கள் பற்றி நாம் விவரமாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் தொண்டை மண்டலக் கல்விச் சங்கம், சென்னைத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்றவை தோன்றி புத்தக உருவாக்கத்தில் கண்ட புதுமைகளை புரிந்து கொள்ளலாம். எல்லிஸ், கால்டுவெல் போன்றோர் திராவிட கருத்தியலில் மதம் சாராத புத்தகங்களை பதிப்பிக்கும் மரபை கொண்டு வந்தனர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் மதம் சார்ந்து, மனித நேயத்தை வளர்க்கக் கூடிய நூல்களை பதிப்பித்தார். மாயுரம் வேதநாயகம் பிள்ளை கிறித்துவரானாலும், திருவாவடுதுறை மடத்திற்கு சென்று இலக்கியம் மற்றும் பதிப்புப் பணிகள் குறித்து விவாதித்த செய்திகளும் உண்டு. வேதநாயகம் அவர்கள் இராமலிங்கனாரின் சமரச சன்மார்கத்தை நூல் வடிவில் கொண்டு வந்தார். இவரை அடியொற்றி அ.மாதவையா பிற்காலத்தில் பணிகளை தொடர்ந்தார். இராஜம் அய்யருடைய நாவலும் இந்தக் காலத்தில் வெளிவந்தவையே. அப்போது மெக்காலேவின் கல்வித் திட்டமும் உருவாகி பாடநூல்களும் அச்சிலேறின. மனோன்மணியம் சுந்தரனாரின் நூற்றொகை நூல் பதிப்பியலில் பல சிறப்புகளை பெற்றது. இத்தகைய சான்றோர்களின் பணிகளால் அச்சுக்கலையும் பதிப்புத் துறையும் இன்று சிறந்து விளங்குகிறது.

கால்நடையாக திரிந்து ஏடுகளை சேகரம் செய்து அவற்றை முறைப்படுத்தி நமக்கு வழங்கிய உ.வே.சா. போன்ற தன்னலம் கருதாத பெருமக்களை நாம் வணங்க வேண்டும். பாண்டித்துரை தேவர் ஒருமுறை மதுரையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது, தமிழ் வளர்த்த மதுரையில் படிக்க கம்பராமாயணமும், திருக்குறளும் யாரிடமும் கேட்டும் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டார். அதன் விளைவாக, மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவி அங்கிருந்து பல நூல்களை வெளியிட்டார். இவ்வாறு பல பெருந்தகைகள் இவ்வரிசையில் வருவார்கள். இப்படிப்பட்ட முன்னோர்கள் காலம் நமக்கு வழங்கிய அருட்கொடைகளாவர்.

விடுதலைப் போராட்டத்தில் பல கொடுமைகளை சந்தித்த வீரத் தியாகிகளை போன்று, தமிழ் நூல்கள் அச்சேற காரணமானவர்கள் சந்தித்த வேதனைகள், பரிகாசங்கள், சிரமங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவே வேதனையாக உள்ளது. இந்தப் பதிப்புத் துறையில் ஈடுபட்ட எண்ணற்றோரின் பெயர்கள் இன்றைக்கு நினைவில் இல்லாமல் போய்விட்டது. தமிழ் மொழி காக்க எண்ணற்ற தியாகங்களை பதிப்புத் துறையில் செய்தவர்களை நாம் வணங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

 

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons