திருப்பாவை #கோதைமொழி 13.மார்கழி

0
#திருப்பாவை
#கோதைமொழி 13.மார்கழி  
“ *வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று* ”
புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!
புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று – இதைப் பார்த்து விட்டு அப்புறம் மற்ற விளக்கத்துக்குப் போவோம்!
வெள்ளி=Venus! வியாழன்=Jupiter!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = Venus rose as Jupiter set!
 பொதுவா சூர்யோதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்! 
* ஆனால் வியாழன் (Jupiter) அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!
வியாழன் கிரகம் ஒரு பக்கமாய் மறைய, எதிரே வெள்ளிக் கிரகம் தோன்றும் வானியல் நிகழ்வு இது! வானில் சந்திரனும் இன்னும் மறையவில்லை! மேற்றிசையில் இருக்கு! சூரியன் இன்னும் ஒரு மணியில் இதோ உதிக்கத் துவங்கப் போகிறது!
பார்க்கிறாள் கோதை! அவள் காலத்தில் நடைபெற்ற ஒரு அதிசய வானியல் நிகழ்வை உடனே குறித்து வைக்கிறாள் அவள் திருப்பாவை டைரியில்! ஒரு கோதையின் டைரிக் குறிப்பு!
எப்போதெல்லாம் இப்படி அதிசய நிகழ்வு நடந்தது என்பதை விஞ்ஞானிகளின் துணையோடு, வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள். அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! 
புள்ளின் வாய் கீண்டானை = கொக்காக வந்த பகாசுரன் அலகைப் பிளந்தானை (கண்ணனை)
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை = இந்தப் பொல்லா அரக்கன் இராவணன் என்று சொல்வாரும் உண்டு!
ஆனால் சென்ற பாட்டில் இராவணனைக் கோமான் (Gentleman) என்று பாடி விட்டாள்! மேலும் இராவணன் தலையை இராமன் கிள்ளிக் களையவில்லை! அப்போ இது யாரா இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்!
கீர்த்திமை பாடிப் போய் = இப்படி மூர்த்தியின் கீர்த்தியை பாடிக் கொண்டு
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் = புள்ளைங்க (பொண்ணுங்க) எல்லாம் பாவை நோன்பு நடக்கும் படித்துறைக்குப் போகுதுங்க!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = வெள்ளிக் கிரகம் தோன்ற, அதன் முன் வியாழன் கிரகம் மறையுதே! இது என்ன அதிசயம்!
புள்ளும் சிலம்பின காண் = பறவைகள் பலவும் சிலம்ப ஆரம்பித்து விட்டன! இந்த அதிசய வானியல் நிகழ்வைப் பார்த்தா? இல்லை இது அதிகாலைப் பறவைச் சத்தமா? இப்போதும் கிரகணங்களின் போது பறவைகள் பலமாகக் கத்துவதைப் பார்க்கலாம்!
போதரிக் கண்ணினாய் = போது+அரிக் கண்ணை உடையவளே! போது=மலர்; அரி=வண்டு! வண்டு மேயும் மலர் போல இருக்குடி உன் கண்ணு!
பூப்போல விரிந்த கண், அதில் கருவண்டு போல உன் கருமணி நல்லாவே தெரியுது! இப்படியா விழிச்சிக்கிட்டே அரைத் தூக்கம் தூங்குவ? அடிச்சீ! எழுந்து வா! (ஆண்டாள் காட்டும் உவமையின் சக்தியைப் பாருங்க….முழிச்சிக்கிட்டே தூங்கும் கண் = போது அரிக் கண்)
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? = ஆற்றிலும் குளத்திலும் முங்கி முங்கிக் குளிக்கும் சுகம் போல வருமா? அதுவும் சில்லுன்னு தண்ணி உடம்பில் படும் போது, முதலில் குளிரெடுத்தாலும், பிற்பாடு எவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கும்!
பாவாய், நீ நன்னாளால் = பெண்ணே, நல்ல நாளு அதுவுமா இன்னிக்கி கூடவா தூக்கம்?
கள்ளம் தவிர்ந்து கலந்து = உன் கள்ளமான அரைத் தூக்கம் போதும்! வா, எங்களுடன் கலந்து விடு! எம்பெருமானிடத்தில் “கலந்து” விடு!
 திருக் “கலந்து” சேரும் மார்ப தேவ தேவ தேவனே,
இருக் “கலந்த” வேத நீதி ஆகி நின்ற நின்மலா,
கருக் “கலந்த” காள மேக மேனி யாய நின்பெயர்,
உருக் “கலந்து” ஒழிவி லாது உரைக் குமாறு உரைசெயே!
இப்படிக் கலந்து கலந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
#திருப்பாவை
#கோதைமொழி

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons