வேலுப்பிள்ளை பிரபாகரன் – கல்கி பேட்டி

0

பல முக்கிய செய்திகளை அப்போது பகிர்ந்துள்ளார்

கடந்த 1986ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் வாரம் “கல்கி” இதழுக்காக  திரு. கல்கி ப்ரியன்  அவருடைய சகாக்களோடு வேலுப்பிள்ளை பிரபாகரனை மூன்று மணி நேரம் பேட்டி கண்டது அவருடைய நினைவு அடுக்குகளில் எவ்வளவு பசுமையாக நிலைத்திருக்கிறது என்பதனை பகிர்ந்துக் கொள்கிறார். இது ஒரு முக்கியமான பிரபாகரனின் பத்திரிக்கை பேட்டியாகும். பல விடயங்களைப் பற்றி இதில் பேசியுள்ளார்.
 
1980களில் வெகுஜன பத்திரிகைகளில் பேட்டி-கட்டுரைகள் எழுதத் துவங்கினேன். திரு.நெடுமாறன் அவர்கள் காமராஜ் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருந்தார். வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம் தான் அவர் எனக்கு பழக்கம். நெடுமாறன் மைலாப்பூர் கோவிலருகில் சுந்தரேஸ்வரர் தெருவிலும் ராதாகிருஷ்ணன் அருகில் சாலை தெருவிலும் குடியிருந்தார்கள். எதாவது தகவலுக்காகவும் பேட்டிக்காகவும் இருவரையும் அடிக்கடி சந்திப்பேன். 1983 காலகட்டத்துக்கு பிறகு ஈழத்து இளைஞர்களின் நடமாட்டம் அவர்களின் வீடுகளில் அதிகமாக இருக்கும்.

ராதா வீட்டில் தான் பிரபாகரன் தங்கியிருநதார். எதேச்சையாக நம்மை பார்த்தாலும் ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்று விடுவார் பிரபாகரன். ஈழப் பிரச்னை தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றத் துவங்கிய நிலையில் பிரபாகரனைப் பற்றியும் புலிகளைப் பற்றியும் மீடியாக்களில் நிறைய செய்திகள் அடிபட துவங்கின. எப்படியாவது பிரபாகரனை பேட்டி காண வேண்டுமென்று ராதாவை நச்சரித்துக் கொண்டிருநதேன். சில சமயம் ராயப்பேட்டை சுபா புகைப்பட நிறுவனத்தில் புலிகளின் பத்திரிகை தொடர்பாளர் பேபியை சந்திப்பதுண்டு. அவர் மூலமாக வும் வேறு பல sourceகளிலும் முயற்சி செய்தோம்.
 
 
இவ்வளவு கடும் முயற்சிகளுக்குப் பிறகு ஒரு நாள் ராதாவைச் சந்தித்த போது பிரபாகரன் ‘கல்கி’க்கு பேட்டியளிக்க சம்மதித்திருப்பதாக கூறினார். சில நாட்கள் கழித்து நாள்-நேரம் உறுதியாயிற்று. இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகில் தங்கியிருந்தார் பிரபாகரன்.(அந்த வீட்டில் தான் மாடியில் குண்டு வெடித்து பெரிய சர்ச்சையானது) பிரபகரனை நாங்கள் பேட்டி கண்ட போது(அப்போதைய கல்கி உதவியாசிரியர் இளங்கோவன், நான் மற்றும் சந்திரமௌலி) புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கமும் உடனிருந்தார். புகைப்பட நிபுணர் ஏ.வி.பாஸ்கர் அவர்களின் அருமையான படங்களுடன் 1986 டிசம்பரில் வெளிவந்த கனமான நீண்ட அட்டை பட பேட்டி அது.
 
 
நாங்கள் (உதவி ஆசிரியர் இளங்கோவன், நான்  மற்றும் சந்திரமௌலி) கேட்ட 32 கேள்விகளுக்கும் எந்தவித பதட்டம், தடுமாற்றமின்றி தெளிந்த நீரோட்டமாய்  அமைந்த பதில்கள். ஆங்கிலக் கலப்பில்லாத ஈழத்தமிழ் பிரவாகம். கூட இருந்த பாலசிங்கம் மட்டுமே அவ்வப்போது ஆங்கிலத்தை பயன்படுத்தினார்.  இந்திய அரசு பிரபாகரனை தங்கள் கொள்கைக்கேற்றபடி வழி நடத்த வேண்டுமென்று அவருக்கு பல அழுத்தங்களைக் கொடுத்துவந்த நேரம் அது. தமிழக அரசால் புலிகளிடமிருந்து பறிக்கப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை உண்ணாவிரதமிருந்து திரும்பப் பெற்றார் பிரபாகரன். பரந்த அளவில் பேசப்பட்ட பேட்டி.
 
 
இந்த சூழலில் “அகிம்சை போராட்டத்தின் மூலம்  காந்தி இந்திய விடுதலையை பெற்றுத் தந்தது போல  நீங்களும் ஈழத்தில் முயற்சி  செய்யலாமே?” என்பது எங்கள் கேள்விகளில் ஒன்றாக இருந்தது.
 
அதற்கு பிரபாகரன் பதில்:
“உண்மைதான். ஆனாலும் காந்தியடிகளின் அகிம்சை போராட்ட முறைதான் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது.  இந்தியர்களின் சுதந்திர எழுச்சியைக் கண்ட ஆங்கிலேயர்கள் இந்த அகிம்சை முறை தோல்வியுற்றால் எதிர்காலத்தில் இவர்கள் ஆயுதமேந்தவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். அதைத்தான் நேதாஜி போன்றவர்கள் உணர்த்தினார்கள். இது காரணமாகத்தான் தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளுக்கு ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுக்க முன் வந்தார்கள். அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம்.”
 
அவரது பேட்டியில் இறுதியாக பிரபாகரன் அழுத்தமாகச் சொன்ன ஓரு விஷயம்: “எங்களுக்கு இங்குள்ள (தமிழகம்) அனைவரும் ஓன்றுதான். எனவே தயவு செய்து இங்குள்ள அரசியலோடு எங்களை தொடர்புப் படுத்தாதீர்கள்.”
 
அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பேட்டி அது.
 
அந்தப் பேட்டியோடு வந்த பெட்டிச் செய்தியில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்காக என்னிடம் திரு.பழ.நெடுமாறனும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் கோபப்பட்டார்கள். அனுபவமின்மை மற்றும் ஆர்வக்கோளாறு காரணமாக நான் அதை பதிவு செய்து விட்டேன். அந்த செய்தியை தவிர்த்திருக்கலாம் பெட்டிச் செய்தியைப் பார்த்த நெடுமாறன் அவர்கள் என்னைப் பார்த்து கேட்டது: “நீங்கள் எனக்கு நண்பரா..எதிரியா?”. அந்த அனுபவம் நல்ல பாடம்.
 
இந்தப் பேட்டிக்குப் பிறகு  உளவுத்துறை டி.ஜி.பி. மோகன்தாஸ் எங்கள் ஆசிரியரை சந்திக்க விரும்பினார். ஆசிரியரும் நானும் அவரைச் சந்தித்தோம். விடுதலைப்  புலிகள் மீது மத்திய,மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் பின்னனியை அவர் விளக்கினார்.- கல்கி ப்ரியன்.
 
பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3
பக்கம் 4
பக்கம் 5
பக்கம் 6
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons