திரைக் கலைஞர் சிவகுமார்

0
இன்றைக்கு மதிப்புக்குரிய திரைக் கலைஞர் சிவகுமார் அவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவருக்கும், எனக்கும் 1984 கால கட்டத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு.
நான் அவரை என்ன முதலாளி? என்ன கவுண்டரே என்று அழைப்பேன்? அவரும் என்னை,என்னையா கருசக்காட்டு நாயக்கரே என்று அழைப்பார்? இப்படியான பிரியமான நட்பு.
அவரும் கி.ரா.வை தந்தையாக மதிக்கக்கூடியவர்.  என் நூல்கள் வெளியிட்டு விழாக்கள் அனைத்திலும் திரு. சிவகுமார் அவர்கள் பங்கேற்றுள்ளார்.
நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் இலக்கியம், அரசியல், பொது விசயங்களை விவாதிப்பது உண்டு. மகாபாரதம், இராமாயணத்தையும் கதைச் சுருக்கத்தை அவர் இரண்டு மணிநேரத்தில் தனித்தனியாக விரிவாக சொல்லக்கூடிய ஆற்றலும், ஆளுமையும் பெற்றவர்.
அடிக்கடி சொல்வார்;இதற்கு நீதாய்யா காரணம் என்று சொல்வார். ஏன் என்று கேட்டால் இராமாயணம் உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரைத் தொகுப்புக்களை நீதாய்யா கொடுத்த அந்த நூல்களை படித்துதான் எனக்கு ஆர்வம் வந்தது.
இராமாயணத்திற்கு வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், ரசிகமணி டி.கே.சி.,இராஜாஜி,
அ.ச. ஞானசம்பந்தம் போன்ற பல தமிழறிஞர்கள் உரை எழுதியுள்ளார்கள்.
மகாபாரதம் கும்பகோணம் பதிப்பகம் வெளியிட்ட இராமானுசாச்சாரியார் தொகுத்து வெளியிட்டதும், வில்லி பாரதமும், நல்லாபிள்ளை பாரதமும், இராஜாஜி உரை, வை.மு.கோபால
கிருஷ்ணமாச்சாரியார்போன்ற மகாபாரத பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
சிவகுமார் அவர்கள் இராமாயணத்தைப் பற்றி நூறு பாடல்களில் கம்பன் என் காதலன் என்ற உரையும், மகாபாரதம் முழு பாரதக் கதை இரண்டு மணிநேரத்தில் ஆற்றிய உரையை கேட்டாலே முழுமையான இரண்டு காப்பியங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
அவர் வரைந்த ஓவியங்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவிகளாகவே என்றைக்கும் இந்த மண்ணில் இருக்கும்.
அவர் நடித்த திரைப்படங்களில் உள்ள அறிய புகைப்படங்களை தொகுப்பாகவும் வெளியிட்டுள்ளார்.
ஓவியங்களின் தொகுப்பையும், திரைப்பட புகைப்படங்களின் தொகுப்பையும் இவர்களின் புதல்வர்களான தமிழகம் போற்றும் திரைக் கலைஞர்களான சூர்யாவும், கார்த்தியும் இணைந்து பல லட்சங்கள் செலவு செய்து தனித்தனியாக இரண்டு அரிய தொகுப்புகளாக தமிழகத்திற்கு அற்பணித்தது மகிழ்ச்சியான செய்தியாகும்.இதுசினிமாவரலாற்றுக்கு ஆவணமாகவும்,இவரின் ஓவியங்கள் தொகுப்பும் தமிழகத்தின்கலாச்சாரத்தை பறைச்சாற்றும் ஆதாரங்களாக விளங்கும்.
சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது இவரின் பேச்சு கொங்கு கிராமத்து பேச்சுவழக்கில் இருக்கும்.
 எருமை கட்டித்தயிரிலிருந்து கம்பங்கூல் வரை பேசிக்கொள்வது வாடிக்கை. தமிழ் படைப்புகளிலிருந்து  சினிமா ஏடுகளாக வெளிவந்த பேசும் படம்,பொம்மை வரையான பேச்சுகள் தொடரும். 
அவரோடு பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது.
என்னுடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் கேள்விக் கேட்டு அதுக்குறித்து கண்டிப்பதும் உண்டு. என் மனைவி இறந்தபோது என்னய்யா அற்புதமான இல்லாலை இழந்துவிட்டியே நீ கவனித்திருக்க வேண்டாமா என்று கவலையோடு கேட்பது வாடிக்கை. என் மனைவியிடம் அன்பை காட்டுவார்.
தற்போது அவர், தி.நகர் கிருஷ்ணா தெருவில் குடியிருந்த பழைய வீட்டிலிருந்து அருகே ஆற்காடு வீதியில் உள்ள புதிய வீட்டிற்கு புதல்வர்களுடன் குடி பெயர்ந்துள்ளார். இந்த வீடு நல்ல கட்டட கலை நுணுக்கத்தோடு கட்டப்பட்டுள்ளது.திரு.சிவகுமார் சொன்னார்,  என்னுடைய இரண்டு மருமகளும் ஒரே வீட்டில்குடியிருக்கனும் சொன்னதனால்தான் இந்த வீட்டை கட்டினோம் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.
நான் சொன்னேன் விந்திய-சத்புரா மலைகளில் உள்ள மராட்டியத்திலிருந்து ஒரு மருமகளும், உங்கள் கொங்கு மண்டலத்திலிருந்து வந்த ஒரு மருமகளும் இருப்பதால் இது பாரத விலாசம் தான் என்றேன்.
உங்கள் மனம் போல உங்களுடைய வாழ்வு அமைந்துள்ளதற்கு பெருமை கொள்கிறேன் என்று சொன்ன போது சிவகுமார் தலையை ஆட்டிக் கொண்டார்.
அடுத்த மாதம் லண்டன் செல்கிறேன் என்று சொன்ன போது காந்தியார் படங்களை கொடுத்து நீங்கள் சந்திக்கும் முக்கியமானவர்களுக்கு இந்த படங்களை வழங்குங்கள் என்று தாராளமாக ஒரு சகோதர பாசத்துடன் என்னிடம் வழங்கியதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
எழமையும், பகட்டு இல்லாத அன்பை காட்டும் அற்புத மனிதர்தான் சிவகுமார் அவர்கள்.
#சிவகுமார்
#தமிழகதிரையுலகம்
#இராமாயணம், #மகாபாரதம்
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
29.03.2017

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons