ஈழ சகோதரர் குணாலன், அண்ணன் தங்கப்பாண்டியன், தேசமுத்து – சில நினைவுகள்

0

இன்றைக்கு ஜெர்மனியிலிருந்து சகோதரர் குணாலன் வந்திருந்தார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுக்கு நெருக்கமானவர்.  பழைய சம்பவங்களை எல்லாம் நினைவுபடுத்தினார். 1984 என்று நினைவு. பேபி சுப்ரமணியம், நேசன், நடேசன் போன்றவர்களோடு அம்பாசமுத்திரம் பக்கம் ஆயுத பயிற்சி முகாம் பணி குறித்து சென்றுவிட்டு என் கிராமத்தில் தங்கிவிட்டு, மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு பயணித்தோம். அப்போது மாவட்ட செயலாளர் அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் உடன் பயணித்தார். அவருக்கு பேபியையும் மற்றவர்களையும் அறிமுகம் செய்து வைத்தேன். குணாலனும் உடன் வந்தார். அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் மல்லாங்கிணற்றில் இருந்து வரும்போதே எவர்சில்வர் டிபன் பாக்ஸை காலை உணவுக்காக அவருடைய வீட்டிலிருந்து இட்லி எடுத்து வந்தார். நாங்கள் திண்டுக்கல்லை நெருங்கும்போது காலை உணவுக்காக நாங்கள் வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலங்களை பிரிக்கும்போதே, அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் என்னிடம், “தம்பி அந்த பொட்டலத்தை என்னிடம் கொடுங்கள், இந்த இட்லியை பேபி சுப்ரமணியத்திடம் கொடுத்து அந்த தம்பிகளிடம் சாப்பிடச் சொல்லுங்கள்” என்று அவர் கொண்டு வந்த டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு என்னிடம் இருந்த டிபன் பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டார்.

திரு. தங்கப்பாண்டியன் அவர்கள், “இந்த தம்பிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியோடு விருந்தளிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் நான் வீட்டிலிருந்து எடுத்து வந்த இந்த உணவையாவது சாப்பிட்டால் எனக்கு சற்று திருப்தியாக இருக்கும்” என்று சொன்னார். ஒரு சமயம் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது, ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைக் கண்டித்து சுவரொட்டிகளை தென் மாவட்டங்களில் ஒட்டவேண்டும் என்று வைகோ முடிவெடுத்து கலைஞருடைய ஒப்புதலோடு பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் அவற்றை எடுத்துச் சென்று, நானும், திவானும் அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் வீட்டில் காலை 8 மணி அளவில் ஒப்படைத்தோம். அப்போது ஈழப் பிரச்சினைகளில் அவரது ஆர்வத்தை அறிய முடிந்தது.  இந்த சம்பவங்களையெல்லாம் குணாலன் சொல்லும்போது மறைந்த தங்கப்பாண்டியன் அவர்களுடைய நினைவு வந்தது. இந்த நினைவோடு தொடர்பாக சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு, பெ. சீனிவாசன் போன்றவர்களோடு பழகிய நாட்களை மறக்க முடியவில்லை.

மற்றொரு செய்தியையும் குணாலன் சொல்லும்போது, “அண்ணே, தேசமுத்து என்ற ஆயிரம் விளக்கு பகுதி தி.மு.க. தொண்டர் இலங்கை தமிழர்களுக்காக நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுத்து தன்னுடைய அரசு பதவியிலிருந்தே நீக்கப்பட்டார். அப்போது உங்களைத் தேடி வரும்போது, கண்ணீர் கம்பளையுமாக இருந்தாரே. அவர் எப்படி இருக்கிறார் அண்ணா” என்று என்னிடம் கேட்டார்.

நான் சொன்னேன் 1992ல் அவர் வழக்கில் நியாயமாக தீர்ப்பு வந்து மறுபடியும் பணியில் சேர்ந்துவிட்டார் என்றேன். இந்த தேசமுத்து சாதாரண தி.மு.க. தொண்டன். ஐந்து ஆண்டு காலம் ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டு தைரியமாக, வேண்டி விரும்பி பிணைக் கையெழுத்துப் போட்டதால் பதவி இழந்து வருமையில் தனது குடும்பம் வாடியபோதும், அதை எதிர்கொண்டார். அவர் வழக்கை அக்கறையோடு நடத்தி அவர் இழந்த அரசு வேலையை திரும்பப் பெற்றுத் தந்தது.

தியாகம் செய்த தேசமுத்து இன்றைக்கும் ஆயிரம் விளக்குப் பகுதியில் பாம்குரோவ் ஓட்டல் அருகே ஒரு சாதாரண குடிசை வீட்டில்தான் குடியிருக்கின்றார்.  எங்கு பார்த்தாலும் நன்றி உணர்வோடு என்னோடு பழகுவதும், “அண்ணே, யார் யாரோ பதவிக்கு வாராங்க. 40 வருசமா ஓடி ஆடித்தான் திரியிறீங்க. என்னென்ன இது” என்று அக்கறையோடு சொல்லும்போது, அவையெல்லாம் மனதை நெகிழச் செய்கின்றது. பதவிகள், கால் செருப்புக்கு சமானம். வரும், போகும். நிரந்தரம் என்பது களப் பணியும், நாம் செய்கின்ற செயல்களும்தான் ஆளுமை. 43 ஆண்டுகளில் அரசியல் வாழ்வில் பெருந்தலைவர் காமராஜர், பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தலைவர் கலைஞர், வைகோ, என்ற ஆளுமைகளோடு வரிசைக்கிரமமாக பணியாற்றியதை எல்லாம் யாரும் மறுக்க முடியாது. இது வரலாறுதானே!  அகில இந்திய அளவில் ஏ.கே. அந்தோணி, ராம் விலாஸ் பாஸ்வான், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், நிதிஷ்குமார், மறைந்த தேவராஜ் அர்ஸ், கே.பி. உன்னிகிருஷ்ணன், மேனகா காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அனிதா பிரதாப் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் மதிக்கக் கூடிய அளவில் இருக்கின்றேன் குணாலன். இதுவே எனக்கு போதும் என்று குணாலனிடம் தெரிவித்தேன்.

இதையெல்லாம் குணாலனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது தம்பி பிரபாரகன், பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், நடேசன், திலகர் போன்ற முன்னணி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களை பற்றியெல்லாம் பேசிக்கொண்டோம்.  மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், எலியட்ஸ் பீச் போன்ற பகுதிகள்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு நடமாடிய இடங்கள். பைலட் தியேட்டர், சபையர், சத்யம், தேவி போன்ற திரையரங்குகளில் நல்ல திரைப்படங்களை பார்த்ததெல்லாம் பேசியது இன்றைக்கு ஒரு தெம்பை தந்தது.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons