சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி

0

சங்கரன்கோவில் என்றால் ஆடித் தபசு, நவநீத கிருஷ்ணன் லாலா கடை அல்வா, குல்குந்து, விடியற்காலையில் அசைவ ஆட்டுக் கால் சூப்பு, சுல்தான் ஹோட்டல் பிரியாணி, நெல்லை சாலையில் உள்ள பழைய தாலுகா ஆபிஸ், தற்போதைய பள்ளி வாசலில் அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட், கோமதி சங்கர் திரையரங்கம், உயர்நிலைப்பள்ளி, அக்காலத்தில் அம்பலவாணன் பிள்ளை தாளாளராக இருந்து நடத்திய மடத்துப்பட்டி கோபாலநாயக்கர் கலைக் கல்லூரி, டாக்டர் சீனிவாசன் மருத்துவமனை நினைவுக்கு வரும் அடையாளங்களும், குறியீடுகளும். இதில் சுல்தான் ஹோட்டல் பிரியாணியைப் பற்றி சொல்ல வேண்டும். என்னுடைய மாமனார் பெரும்பத்தூர் கிராமத்தைச் சார்ந்த சங்கரப்பன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் சண்முகசாமி, மேலநீலிதநல்லூர் சேர்மன் முத்துப்பாண்டியனோடு இந்த பிரியாணி கடைக்கு பள்ளிக் காலங்களில் அழைத்துச் செல்வார்கள்.  அங்குள் பென்ச்சில் உட்கார்ந்துகொண்டு, அன்றைய அரசியல் பேசிக்கொண்டே இந்த பிரியாணி சாப்பிடுவது வாடிக்கை.  மறைந்த சுல்தான் அவர்கள் என் மீது பாசமாக “என்ன மாமா” என்று சிறுவனாக இருக்கும்போது அழைப்பார். எனக்கு அப்போது அர்த்தம் என்னவென்றே தெரியாமல் இருக்கும். என்னுடைய மாமா சங்கரப்ப நாயக்கர், மாவட்ட சுதந்திரக் கட்சித் தலைவராக இருந்த ராமானுஜ நாயக்கருடன் அந்த வட்டாரத்தில் பணிகளை செய்வார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதியாக இருந்த என்.ஜி. ரங்கா, ராஜாஜிக்கு மிகவும் நெருங்கியவர்.  அவர் ஒரு முறை இந்த பிரியாணிக் கடையில் சாப்பிட்டுவிட்டு ஹைதராபாத் பிரியாணியைவிட சுவையாக இருக்கின்றது என்று பாராட்டியது இன்றைக்கும் நினைவில் உள்ளது. வேறொரு சமயம் டெல்லியில் அவரை சந்திக்கும்போது இதை நினைவுபடுத்தும்போது மகிழ்ச்சியோடு அவர் சொல்லிய பாராட்டு வார்த்தைகள் இன்றைக்கும் நினைவில் உள்ளது.

தலைப்பாக்கட்டு பிரியாணி (திண்டுக்கல்), ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,மலபார் பிரியாணி,பெங்கால் பிரியாணி, சிந்தி பிரியாணி என பல ஊர்களின் பெயர்களில் புகழ்பெற்ற பிரியாணிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் ஒரு ருசி என்றாலும் சங்கரன்கோவில் பிரியாணி தனித்தன்மை வாய்ந்தது.  சங்கரன்கோவில் சுல்தான் ஹோட்டலில் செய்யப்படும் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பயன்படுத்தும் அரிசியும், எண்ணெய்யும், மற்ற மூலப்பொருட்களை கவனமாக பதப்படுத்தி, வித்தியாசமான முறையில் செய்யப்படுகின்றது. இன்றைக்கும் பிரியாணிகள் பல இடங்களுக்கு செல்லும்போது அவ்வளவு விருப்பத்தோடு உண்ண மனம் வருவதில்லை. ஏனெனில் சங்கரன்கோவில் பிரியாணியை உண்டுவிட்டு, ஏனைய பிரியாணிகள் உண்ண மனம் வரவில்லை. இது ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.  ஆனால் சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணியை உண்டால், திரும்பவும் அந்த பக்கம் போகும்போது பிரியாணியை சாப்பிட்டுவிட்டு போவோம் என்றுதான் மனம் உத்தரவு போடும்.  பாரம்பரியமாக தொடர்ந்து அதே சுவையை நிலைநாட்டி வருகின்ற சுல்தான் ஹோட்டலுக்கு பாராட்டுக்கள்.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons