முன்னாள்_முதலவர்கள் #ஓமந்தூர்_இராமசாமி_ரெட்டியார் #ராஜாபளையம்_குமாராசாமிராஜா

0
#முன்னாள்_முதலவர்கள்
#ஓமந்தூர்_இராமசாமி_ரெட்டியார் #ராஜாபளையம்_குமாராசாமிராஜா 
ஆகியோரின் படங்கள்
சட்டப்பேரவையில்இல்லை
————————————————-
தமிழக சட்டப்பேரவையில் முதல்வராக இருந்தவர்கள் படங்களெல்லாம் திறந்து வைத்திருக்கிறார்கள். ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மற்றும் ராஜாபளையம் பி.எஸ்.குமாராசாமி ராஜா அவர்களின் உருவப்படம் இல்லை. இந்த இருவரும் நேர்மைக்கு இலக்கணமாக
விளங்கியவர்கள். அமைச்சர்கள் குடியிருக்கும் கீரின்வேஸ் சாலை குமாராசாமி ராஜா சாலை தலைவர்
கலைஞர் ஆட்சியில் அதிகாரபூர்மாக
மாற்றப்பட்டது.ஆனால் இன்றும் குமாராசாமி ராஜா சாலை என்று அழைக்காமல் செயதி ஊடகங்கள் கூட
கீரின்வேஸ் சாலை என சொல்வதை கேட்க வேதனையாகயுள்ளது.

ஓமந்தூரார்
————————————-
பொது வாழ்விலும், அரசியலிலும் தகுதியும், தரமும் தடையாக அக்காலத்திலேயே இருந்தது என மறைந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த எஸ்.எஸ்.மாரிசாமி என்னிடம் அடிக்கடி சொல்வார். அதற்கு சாட்சியாக ஒரு சம்பத்தை சொன்னார்.
நேர்மையாளர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின் பிரதமராக (அப்போது முதல்வரை பிரதமர் என அழைப்பர்) இருந்த பொழுது நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் பணி, பொது வாழ்வில் தூய்மை என்பதை பிசகாமல் பின்பற்றினார். காங்கிரஸ் கட்சியினர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை குறை சொல்லி அவரை அவதூறாக பேசியதாகவும், அவரை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என பலர் மெனக்கெட்டதாகவும், நிலைமைகள் மோசமாகி பிரச்சினைகள் கிளம்பி அவருக்கு சிக்கலை உருவாக்கும் வகையில் பண்டித நேருவிடம் பிரச்சினைகளை எடுத்துச் சென்றனர். பெருந்தலைவர் காமராஜருக்கும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது என்றும் மாரிசாமி சொன்னார். 
எஸ்.எஸ். மாரிசாமி கூறியது: தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், பிரச்சினைகள் முற்றிவிட்டது. ஓமந்தூரார் பதவி விலக வேண்டும். ஒரிசா கவர்னராக இருக்கும் குமாரசாமி ராஜாவை சென்னை ராஜதானிக்கு பிரதமராக்கி விடலாம் என்று முடிவுகள் மேற்கொள்ளபட்டு, ஓமந்தூராரை டி.எஸ்.சொக்கலிங்கம் சந்தித்த போது, அவரிடம் ஓமாந்தூரார் ‘எனக்கு எந்த கசமுசாவும் பிடிக்காது. தப்பு செய்கிறது யாராக இருந்தாலும் விட மாட்டேன். கட்சி எனக்குப் பெரிதில்லை. ஒழுக்கமும் சத்தியமும் தர்மமும்தான் எனது குறிக்கோள். இதற்கு மேல் ஒரு நிமிடம்கூட இந்த பெரிய பொறுப்பில் இருக்க மாட்டேன்’ என படபடத்தார்.  நேர்மையாளரான ஓமாந்தூராரை பதவியில் இருக்க விடாமல், சில ஆதிக்க சக்திகளால் ஏற்பட்ட பிரச்சினையில், வில்லை முறித்து போட்டுவிட்டு, திருதிராஷ்டிரன் சபையிலிருந்து விதுரர் விலகியதுபோல அசால்டாக விலகினார். இந்த தைரியமும் நடவடிக்கையும் யாருக்கு வரும்? பதவியை விட்டு விலகியவுடன், தன்னுடைய பிரதமர் இல்லமான ராஜாஜி ஹாலுக்கு அருகே உள்ள கூவம் ஹவுசுக்கு வந்தார். அண்ணா சாலையில், தர்பார் ஓட்டலுக்கு எதிரே உள்ள டாக்சி ஸ்டாண்டில் ஒரு காரை பிடித்தார். பிரதமராக இருப்பவர் பதவி விலகினாலும், அரசு வாகனத்தை தன்னுடைய சொந்த ஊர் வரை பயன்படுத்தலாம். ஆனால் பதவி விலகிய அடுத்த நிமிடமே அரசு சலுகைகளை உதறி தள்ளினார். கூவம் ஹவுசிலிருந்த தனது துணிமணிகளையும், தனது புத்தகங்களையும், தனக்கு சொந்தமான பாய், தலையணைகளையும் எடுத்து கொண்டு வடலூருக்கு பயணமானார் என்று எஸ்.எஸ்.மாரிசாமி கூறினார்.
இதைப் பார்க்கும் பொழுது, இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனை பேர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை பற்றி அறிந்திருப்பர். இளைய சமுதாயம் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒழுக்கத்தின் அடையாளம், நேர்மையின் இலக்கணம், தியாக சுடர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு இந்த தமிழகம் வரலாற்றில் உரிய இடத்தை அளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.
சென்னை ராஜதானிக்கு பிரதமராக இருந்த ஓ.பி.ஆர், திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அரசு சின்னமாக்கினார். உண்மைகளை சொல்லத் தயங்கக் கூடாது, உள்ளது உள்ளபடி பதிவுகளை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பத்தியின் நோக்கம். நான் குறிப்பிட்ட இந்த செய்திகளை மறைந்த எஸ்.எஸ்.மாரிசாமியே, 29.9.1995 அன்றைய தினமணியில் ‘ரெட்டியார் ஒரு கர்மயோகி’ என்ற கட்டுரையில் இதைவிட தெளிவாக எழுதியுள்ளார். விவசாயிகளின் முதல்வர்; கண்ணியமான தலைவர்; உத்தமர் காந்தியின் சீடர்; கிராமத்து பிரஜை; நாட்டுக்கு உழைத்தவர். எஸ்.எஸ்.மாரிசாமி சொன்ன சில செய்திகளை நாகரிகம் கருதி, பலரை புண்படுத்தும் என்பதற்காக இங்கு குறிப்பிடவில்லை. பொது வாழ்வில் நல்லவர்களுக்கு என்றும் தடையும், தடங்கலும்தான். பொது வாழ்வு போராளிகள் இதைக் கண்டு அஞ்சுவது இல்லை.
நேர்மையான முதல்வர், விவசாய முதல்வர், விடுதலைக்கு பிறகு சமூக நீதியை முதன்முதலில் அமலுக்கு கொண்டு வந்தார். தமிழ் கலைக் களஞ்சியம் மற்றும் தமிழ் பயிற்று மொழி போன்ற முக்கிய செயல்பாடுகளை கொண்டு வந்தார். தமிழகத்தில் அணைகளை திட்டமிட்டார். ஆட்சியில் யார் தலையீடும் இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கறாராக இருந்தவர். பண்டிதர் நேரு ஏதாவது பரிந்துரைத்தாலும் நியாயம் என்றால் மட்டுமே செய்வார். சுதந்திர போராட்ட காலத்தில் சிறையில் கடுமையான சூழ்நிலைகளை கண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் மிகப் பெரிய புத்திசாலியான இவர் ICS அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறுபவர். 
தேவையில்லாமல் தன் வீட்டில் கூட்டம் கூடுவதோ வெட்டிப் பேச்சு பேசுவதோ அவருக்கு பிடிக்காது. ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியவைகளை முன்னெடுத்தவர். பயிர் காப்பீடு திட்டம், ஒழுங்கு முறை விற்பனை நிலையம் என விவசாயிகளுக்கான திட்டங்கள் மட்டுமல்லாமல் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்று தீவிரமாக பணியாற்றியவர். 
ஒருமுறை திருப்பதிக்கு ஓலைச்சுவடு நூலகத்தை பார்வையிடச் சென்றார். உடனே அங்கு சொற்பொழிவாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் நான் பெரிய சொற்பொழிவாளர் எல்லாம் இல்லை, நூலகத்தை பார்வையிடவே வந்தேன் என்று தமிழில் பேச ஆரம்பித்தவுடன் அவரை தெலுங்கில் பேசச் சொல்லி கேட்க நான் தமிழில் தான் பேசுவேன், தமிழ் மண்ணில் தான் நான் வளர்ந்தேன் என்று திருப்பதியில் உறுதியாக சொன்னவர். தமிழை ஆட்சி மொழி என்று முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் அமுல்படுத்தினார். நாமக்கல் கவிஞரை முதன் முதலாக அரசவை கவிஞராக நியமித்தார். நேர்மையாக இருந்தால் அரசியலில் இருக்க முடியாது என்று உணர்ந்து தன்னுடைய இறுதிக் கட்டத்தில் வடலூர் சென்றார். 
ஓமந்தூராரின், குமாராசாமிராஜா புகழ் என்றும் ஓங்க வேண்டும்.
#முன்னாள்_முதலவர்கள்
#ஓமந்தூர்_இராமசாமி_ரெட்டியார் #ராஜாபளையம்_குமாராசாமிராஜா 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
3-11-2019.
#KSRPostings
#KSRadhakrishnanPostings

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons