மினர்வா டுட்டோரியல் – Minerva Tutorial College, Chennai.

0

நேற்று எழும்பூர் ஹால்ஸ் ரோடு வழியாக பயணிக்கும் பொழுது, அந்தப் பகுதியிலிருந்த மினர்வா டுட்டோரியலும்  அதன் நிறுவனர் மறைந்த  ஏ.என்.பரசுராமன் அவர்களும் டாக்டர்.சந்தோசம் அவர்களும் ,   மற்றும் உலகப் பல்கலைக்கழக மையம் (World University Centre, Chennai) பளிச்சென்று நினைவுக்கு வந்தது.

மினர்வா டுட்டோரியல் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நிறுவனமாக
1950-60-70களின் துவக்கம் வரை திகழ்ந்தது. அதனை நிறுவிய ஏ.என்.பரசுராமன் நல்ல கல்வியாளர். எஸ்.எஸ்.எல்.சி,  பி.யு.சி,  பி.ஏ,  பி.எஸ்சி , ஆகிய தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் திரும்பவும் தேர்வுகளில் வெற்றிபெற அப்போது டுட்டோரியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது உண்டு.

இந்தவகையில் சென்னையில் மினர்வா டுட்டோரியல் கல்லூரி முதன்மையானதாக செயல்பட்டு வந்தது. திருச்சியில், திருச்சி டுட்டோரியல் கல்லூரி ( TTC), மதுரையில், சங்கரநாராயணன் அவர்கள்  நடத்திய ஸ்டூடண்ட்ஸ் டுட்டோரியல் கல்லூரி (STC),  மற்றும் ஜெகதீசன் அவர்கள் நடத்திய விக்டரி டுட்டோரியல் கல்லூரி VTC, நெல்லையில், நா வானமாமலை அவர்கள் நடத்திய வானமாமலை டுட்டோரியல் கல்லூரி, நாகர்கோவிலில், டயற்றஸ் அவர்கள் நடத்திய டயற்றஸ் டுட்டோரியல் கல்லூரி என பல டுட்டோரியல் கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தன.

மினர்வா டுட்டோரியல் கல்லூரியின் சேர்ந்துபடிப்பதை சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வதும் உண்டு. மினர்வா கைடுகள் அப்போது பிரபலம். இது பாடப் புத்தகங்களுக்கு நிகரான மொழிநடையும், நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடிய வகையில் அனைத்துப் பாடங்களுக்கும் கைடுகள் என்ற துணைநூல்கள் பரசுராமன்  வெளியிட்டார்.  ஆங்கில மினர்வா கைடுகள்  மேலும் பிரபலமானது.

இதன் அட்டையில் சற்று மஞ்சள், வெளிர் பச்சை அட்டையில் பூ மொட்டு இலச்சினை கொண்டு வெளியிட்டார். அந்த துணை நூல் பாடக்குறிப்புகள் விரிவாகவும் விளக்கமாகவும் கொண்டிருக்கும். மினர்வா டுட்டோரியலின் இலச்சினையில் கிரீடம் சூட்டிய  ரோமர்கள் வணங்கும் மினர்வா தேவதை  முழுத்தோற்றத்தில் நின்றபடி இருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்

 ஏ.என்.பரசுராமன் வெளியீடுகளின் காப்புரிமையில் பிரச்சனை ஏற்பட்டபொழுது 1958ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று,
ஒரு நீண்ட தீர்ப்பினைப் பெற்றார். அந்தத் தீர்ப்பும் இந்தப் பதிவோடு இணைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு : http://indiankanoon.org/doc/1685540/

மினர்வா டுட்டோரியல் ஒருகாலத்தில் சென்னையின் அடையாளமாக எழும்பூர் வட்டாரத்தில் திகழ்ந்தது.

இதன் அருகாமையிலே டாக்டர்.சந்தோசம் அவர்களுடைய மருத்துவமனையும் வட்டவடிவில் இருந்தது. டாக்டர் சந்தோசம் அவர்கள் 1967ல் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்காலத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் சரண்சிங் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தார்.  ”தமிழ்நாட்டின் லோக் தள்” கட்சியின் தலைவராகவும் செயல்பட்டார்.

பிரபல மருத்துவர். சாதாரண ஏழைகளும் கையில் காசு இல்லாமல் அவரிடம் வைத்தியத்திற்குச் செல்லலாம். ஆனால், காலப்போக்கில் தமிழக அரசியல் வரலாற்றில் இவரை மறந்துவிடுவோமோ என்ற குறையும் உள்ளது.

அதன் அருகாமையில் உலகப் பல்கலைக் கழக சேவை மையத்தில், கல்லூரி நாட்களில் தங்கியதும் உண்டு. மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டங்கள்  அந்த விடுதியின் அருமையான உணவு, அருகாமையிலே யுனெஸ்கோ மையம்  இவையெல்லாம் அப்போது அங்கு கண்ட காட்சிகள். இப்போது அந்த மையம் கலையிழந்து உள்ளது.

சேத்துப்பட்டில் அமைந்துள்ள இந்த மையத்தில் இப்போது பல பிரச்சனைகள். வழக்குகள் வரைக்கும் சென்றுவிட்டது.  இப்படி சிக்கலான நிலைமையில் அன்றைக்கு அமைதியாக செயல்பட்ட மையம் இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டதே என்று வேதனை அளிக்கின்றது.

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-05-2015.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons